இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும்.
நாட்டின் ஒருமித்த தன்மையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். பிரிவினைவாதத்தை வலுப்படுத்தும் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் பிரிவினைவாதிகளுக்கு உண்டு, அதனால் 22ஆவது திருத்தத்தக்கு எதிராக வாக்களிப்பேன் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கமைய அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது என குறிப்பிடுவதற்கு உடன்பட போவதில்லை. நாட்டு மக்கள் அரசியலமைப்பு திருத்தத்தை கோரவில்லை, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தையே கோரினார்கள்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காகவே நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு ஆணை வழங்கினார்களே தவிர அரசியலமைப்பு திருத்தத்துக்கல்ல என்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி தலைமையிலான குழுவினர் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வரைபை சமர்ப்பித்துள்ளார்கள். அந்த வரைபு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்தேன். 2020ஆம் ஆண்டு 19ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்காக 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன். தற்போது எனது கொள்கைக்கமைய 20ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்காக ஆதரவு வழங்க முடியாது, ஆகவே 22ஆவது திருத்தத்துக்கு எதிராகவே வாக்களிப்பேன்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கமாட்டேன். இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தின் ஊடாக பலவந்தமான முறையில் 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 13ஆவது திருத்தத்தின் வியூகம் தொடர்பில் பாரதூரமான பிரச்சனை காணப்படுகிறது.
ஒருமிருத்த மற்றும் ஐக்கிய என்ற பதத்தின் வரைவிலக்கணத்தை பெரும்பாலானோர் அறியவில்லை.ஒருமித்த நாட்டில் அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டம் மாத்திரமே காணப்பட வேண்டும்.ஐக்கிய நாட்டில் 9 மாகாணங்களுக்கும் மர்றுப்பட்ட சட்டங்கள் இருக்க முடியும்.நிலப்பரப்பில் பரந்தளவான நாடுகள் மாத்திரமே ஐக்கிய நாடுகளாக காணப்படுகின்றன.இலங்கை போன்ற சிறிய நாட்டை பிளவுப்படுத்தினால் மாத்திரமே ஐக்கியப்படுத்த முடியும்.
13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசியலமைப்பின் ஊடாக ஒருசில தடைகள் ஏற்படுத்தப்பட்டன. தென்சூடான்,இந்தோனேஷியாவின் கிழக்கு திமோருக்கு நேர்ந்த கதியை இலங்கைக்கு நேர ஒருபோதும் இடமளிக்க முடியாது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு அதிகாரத்தை வழங்கும் 13ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளை இரத்து செய்ய வேண்டும் அத்துடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க கூடாது.மாகாண சபைகளின் அதிகாரத்தை வலுப்படுத்தினால் பாராளுமன்றம் மலினப்படுத் தப்படும். மத்திய அரசாங்கத்தை பலவீனப்படுத்துவது பிரிவினைவாதிகளின் பிரதான நோக்கமாக உள்ளது அதற்காகவே 13ஆவது திருத்தம்,17 மற்றும் 19ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனால் தான் நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையில் சுயாதீனமானதா என்பதை ஆராய வேண்டும்.2015ஆம் ஆண்டு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக தமிழ் இனவாத போக்குடைய ஹூல் என்பவர் நியமிக்கப்பட்டார்.சிங்கள மொழி குப்பை கூடை என்று குறிப்பிட்டவர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.ஆணைக்குழுக்களு;கு தொண்டு நிறுவனங்களின் தரப்பினர் நியமிக்கப்படும் போது மக்கள் ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.அரச சேவைகளை மாத்திரம் சுயாதீனப்படுத்த வேண்டும்.
நாட்டின் ஒருமித்த தன்மை மற்றும் புத்தசாசனத்தையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளேன். இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும். இலங்கையின் ஒருமித்த தன்மை அதற்கு பாதுகாக்கப்பட வேண்டும். குருந்தூர் மலையில் பௌத்த விகாரைiயும்,வடக்கில் புத்தர் சிலையையும் ஸ்தாபிப்பதற்கு தடையேற்படுத்தப்படுகிறது, இதற்கு 13ஆவது திருத்தம் ஊடாக அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆகவே 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்படும் என்றார்.