Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

“சோழர்களை இந்துக்களாக்கிவிட்டனர்” |இயக்குநர் வெற்றிமாறனின் கருத்துக்கு கிளம்பும் மறுப்புகள்

October 13, 2022
in Cinema, News
0
“சோழர்களை இந்துக்களாக்கிவிட்டனர்” |இயக்குநர் வெற்றிமாறனின் கருத்துக்கு கிளம்பும் மறுப்புகள்

அமரகவி கல்கியினால் எழுதப்பட்டு 1955ஆம் ஆண்டு புத்தகமாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ தற்போது 2022இல் திரைப்படமாக வந்துள்ளது. கிட்டதட்ட 70 ஆண்டுகள் கனவுக் காவியமாக இருந்த பிரம்மாண்டத்தை இறுதியாக திரையில் பார்த்துவிட்டோம்.

ஆனால், பொன்னியின் செல்வன் வெளியானதிலிருந்து சர்ச்சைகளும் சேர்ந்துகொண்டது. அந்த வகையில் ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக காட்டி, அதன் மூலம் நமது அடையாளங்கள் பறிக்கப்பட்டு வருவதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியது பேசுபொருள் ஆகியுள்ளது.

எப்போதுமே பொன்னியின் செல்வனுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

நாவல் வெளியான பின்னர் அன்றைய உச்ச நட்சத்திரம் எம்.ஜி.ஆர். அதன் கதை உரிமையை வாங்கி, நடிகர்கள் முதற்கொண்டு முடிவு செய்து, போஸ்டரும் அடித்துவிட்டு, படத்தை எடுக்க முயலும்போது நாடக மேடையில் எம்.ஜி.ஆர். கால் முறிந்து ஆறு மாதங்கள் வரை ஓய்வெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதன் பின்னர் எம்.ஜி.ஆர். முயற்சி எடுத்தது கைகூடவில்லை. 

இந்த படத்தை இயக்க மூன்று முறை முயற்சி செய்தார், மணிரத்னம். 

1986இல் வெளியான ‘விக்ரம்’ பட வெற்றிக்குப் பின் கமல்ஹாசன் பொன்னியின் செல்வனை எடுக்க, பட்ஜெட் தயார் செய்து, இயக்குநர் மணிரத்னம், இசை இளையராஜா என்பதெல்லாம் முடிவு செய்தும் படம் எடுக்கப்படவில்லை. 

இப்படத்தின் இயக்குநராக முடிவெடுக்கப்பட்ட மணிரத்னம், 2010ஆம் ஆண்டு மீண்டும் நடிகர்களை முடிவு செய்து திரைப்படத்தை எடுக்க முயற்சித்தும், அது  நடக்காமல் போனது. 

2019ஆம் ஆண்டுக்கு பின் கொரோனா பேரிடர் நேரத்தில் கடுமையாக முயற்சி செய்து, தற்போது திரைப்படம் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டீசரிலேயே சர்ச்சைகள் கிளம்ப ஆரம்பித்தன. 

படம் வரும்போதே சிவ பக்தரான சோழமன்னன் நெற்றியில் இட்ட நாமகரணம் சம்பந்தமாக பிரச்சினை எழுந்தது. 

படத்தில் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்கள் ஆங்காங்கே நவீன வார்த்தைகளை பயன்படுத்தியது குறித்து சர்ச்சை எழுந்தது. 

சோழமன்னன் தாடி வைத்திருந்தாரா? எதற்கு அனைத்து கதாபாத்திரங்களும் தாடி வைத்துள்ளனர் என்கிற கேள்வியும் எழுந்தது. 

பொன்னியின் செல்வன் படத்தை பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு தெலுங்கு தமிழ் ரசிகர்கள் மோதிக்கொள்கின்றனர்.

வந்தியத்தேவன் வீரன்; சோழர் படைத் தலைவர்; அவரை காதல் கிறுக்கன் போல சித்திரித்துள்ளனர் என்று வழக்கறிஞர் ஒருவர் பொலிஸ் ஆணையரிடம் புகாரும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சோழ மன்னனை இந்து மன்னராக சித்திரிக்கிறார்கள் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளமையும் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கலை திருவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டு பேசினார். அப்பொழுது சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியதால் தான் தமிழ்நாட்டில் தற்போது வரை மத சார்பற்ற கலைத்துறை  விளங்கிவருவதாக கூறினார்.

“அசுரன்’ படத்தை எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாக எதுவும் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அப்போது நான் வி.சி.க. தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தேன். இதுபோன்ற பிரச்சினைகளை கையாளும்போது எதனை முதன்மைப்படுத்த வேண்டும் என கேட்டிருந்தேன்.  அதற்கு அவர், ‘தனிமனிதனால் சமூகத்துக்கு தீர்வு கிடைக்கும் என சினிமாவில் சொல்லாதீர்கள். அதே தவறுதான் நிகழ்கிறது. அமைப்பால் திரள வழிசெய்யுங்கள்’ என்றார். 

மேலும், ‘கலை என்பது ஒரு அரசியல். நாம் தெரிந்தோ தெரியாமலோ அரசியலுக்குள் தான் இருக்கிறோம்’ என திருமாவளவன் சொல்லியிருந்தார். இலக்கியம், சினிமா எப்படி அவர்கள் கையில் இருந்தது. அந்த தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது. அதனால்தான் வெளிப்புற ஆதிக்கத்தை எதிர்க்கும் பக்குவத்தையும் சினிமா பெற்றுள்ளது என நினைக்கிறேன். சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாக சென்றடையும் கலைவடிவம்.

மேலும், கலையை சரியாக கையாள தவறினால் நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள்.

அதேபோல் ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. 

சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருந்தார். அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி, தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றால் அவர் இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்ற வெற்றிமாறனிடம், அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து அவரை சாடியிருந்தார், பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா. 

இது ஒருபுறம் இருந்தாலும், வெற்றிமாறன் சொன்னது சரிதான் என்று அவருக்கு ஆதரவுக்குரலும் மறபுறம் ஒலித்த வண்ணமுள்ளது .     

சைவம், வைணவம் என இருந்த அந்த காலத்தில் சைவ மன்னனாக இருந்த சோழனை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்கள் வசப்படுத்த பார்க்கின்றனர். 

“சோழன் எங்க ஆளு” என்று சீமான் கூறியுள்ளார். எங்களுக்கு சைவமும் வைணவமும் ஒன்றுதான். நாங்கள் ஒன்றுபட்ட இந்துவாக இருக்கிறோம். போலி நாத்திகம் பேசுபவர்கள் இந்து மதத்திடம் மட்டுமே பேசுகிறார்கள். போலி சாமியார்களை விட போலி நாத்திகவாதிகள் ஆபத்தானவர்கள் என இயக்குநர் பேரரசு பேச விவகாரம் சூடு பிடித்துள்ளது.

வெற்றிமாறன் சொன்னது உண்மை தான் என குரல் கொடுக்கும் சிலர், அதற்காக சொல்லும் காரணம் என்னவென்றால், ராஜ ராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அந்த காலகட்டத்தில் சைவம், வைணவம், புத்த மதங்கள் தான் இருந்தன. இந்து மதம் என்பது நாளடைவில் வெள்ளைக்காரர்களின் ஆட்சிக் காலத்தில் வந்த ஒன்றாகும்.

அதுமட்டுமின்றி ராஜ ராஜ சோழன் சைவத்தை தழுவி வந்தவர் என்பதால் தான் அவர் சிவன் கோவிலை கட்டியதாகவும் கூறப்படுகிறது.

உண்மையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ ராஜ சோழன்  வாழ்ந்த காலத்தில் இந்து மதமோ இந்தியாவோ இருக்கவில்லை. தமிழர்களான சோழர்கள் சிவனை முழுமுதற் கடவுளாக கொண்டு சைவர்களாகவே வாழ்ந்துள்ளனர். 

ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் சிவன் கோயில் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழேஸ்வரம், அக்கால நூல்கள் என்பன இதற்கு மிக பெரிய உதாரணங்களாக உள்ளன. 

இதேபோல விஷ்ணுவை வழிபட்ட வைணவர்கள் வாழ்ந்துள்ளனர். ஏனைய முருகன், அம்மன் போன்ற எல்லா தெய்வங்களும் வழிபடப்பட்ட போதிலும், எங்கும் இந்துக்கள் என்று வார்த்தைப் பிரயோகம் இருக்கவில்லை.  

இந்தியா என்ற பெயர் எப்படி  ஆங்கிலேயர்களின் வணிகத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதேபோல இந்து என்ற வார்த்தையையும் அக்காலத்தில் உருவாக்கினார்கள். 

இந்தியா என்பது பல தேசங்களின் ஒன்றியமாக உருவாக்கப்பட்டது போலவே இந்து என்பதும் உருவாக்கப்பட்டது. 

இன்று நாம் பொதுவாக இந்துக்கள் என்றே எம்மை கூறுகின்றோம். அதுவே பழக்கமாகவும் வழக்கமாகவும் மாறிவிட்டது. 

ஆயினும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்து சமயத்தை சோழர்கள் பின்பற்றவில்லை சைவர்களாகவே வாழ்ந்துள்ளனர். அதுவே நமது அடையாளம். 

இன்று இந்தியாவில் தமிழர்களின் கலாசாரம் தமிழின் தொன்மை அழிக்கப்பட்டு வருவதாக குரல்கள் ஒலிக்க செய்கின்றது. கீழடி ஆய்வுகள் கூட அதில் செல்வாக்கு செலுத்தின. இந்நிலையிலேயே  இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு பேசுபொருளாகியுள்ளது. 

இந்துக்களாக சோழர்களை காட்சிப்படுத்துவது தமிழர்களின் அடையாளத்தை பாதிக்கும் என்பதே அவரது கருத்து. 

எது எப்படியோ, தமிழர்களான சோழர்களின் கலாசாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள் என்பது தனித்துவமானது. காலத்தால் அழியாத தஞ்சை பெரிய கோவிலை போல.

Previous Post

மகிந்தவை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம்

Next Post

மலேசியாவில் பொதுத் தேர்தல் | மீண்டும் போட்டியிடும் 97 வயது மகாதீர் முகமது

Next Post
மலேசியாவில் பொதுத் தேர்தல் | மீண்டும் போட்டியிடும் 97 வயது மகாதீர் முகமது

மலேசியாவில் பொதுத் தேர்தல் | மீண்டும் போட்டியிடும் 97 வயது மகாதீர் முகமது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures