ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இம்முறையும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது.
எனினும் இதனை சர்வதேசத்தின் சதித்திட்டம் என்று கூறி எவரும் தப்பிக்க முடியாது. ராஜபக்ஷாக்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்களினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 51/1 பிரேரணை கவலைக்குரிய விடயமாகும். பொருளாதார குற்றங்களுக்கு மத்தியில் , மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்தில் இலங்கை தவறான வகையில் பிரசித்தி பெற்று வருகிறது. இது வரவேற்கக் கூடிய விடயமல்ல. இதனை எவராலும் சர்வதேசத்தின் சதித்திட்டம் என்று கூற முடியாது.
இலங்கையை ஆட்சி செய்த தலைவர்களாலேயே இந்த நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்பாடுகளே இதற்குக் காரணமாகும்.
இவை சர்வதேசத்தின் மத்தியில் மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை எவ்வாறு மோசமான நிலைமையில் உள்ளது என்பதை காண்பிக்கின்றன.
ராஜபக்ஷாக்கள் ஆட்சியைக் கைப்பற்றி இயன்றளவில் மக்களை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கினர். தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனை தொடர்ந்து கொண்டிருக்கின்றார். இவர்களது செயற்பாடுகளின் காரணமாகவே நாம் ஜெனீவாவிலும் தோல்வியடைந்துள்ளோம். இது போன்ற நிலைமைகள் தொடருமாயின் வெகுவிரைவில் ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகையையும் இழக்க நேரிடும். அவ்வாறு இடம்பெற்றால் இதனை விட பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.