இந்தியாவும் பாகிஸ்தானும் 7 நாட்களுக்குள் இரண்டாவது தடவையாக மோதும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
ஒரு வாரத்துக்கு முன்னர் பி குழுவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் சந்தித்த இந்த இரண்டு அணிகளும் இப்போது சுப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன.
இந்த சுற்றுப் போட்டியில் இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் ஒரே ஒரு அணியான இந்தியா, இன்றைய போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு ஒரளவு அனுகூலமான அணி என எதிர்வுகூறப்படுகிறது. ஆனால், விளையாட்டு அரங்கில் பரம வைரிகள் எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி கடைசிவரை பரபரப்பாக அமையும் என்பது நிச்சயம். அதேவேளை, பாகிஸ்தான் திருப்பத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் மூன்றாவது தடவையாக சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தங்களைத் தயார் படுத்தும் களமாகவும் இரண்டு அணிகளும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளைப் பயன்படுத்தவுள்ளன.
இந்திய அணியில் சகலதுறை வீரர் ரவிந்த்ர ஜடேஜா உபாதை காரணமாக ஆசிய கிண்ணத்திலிருந்து வெளியேறியுள்ளதுடன் உபாதைக்குள்ளாகியுள்ள பாகிஸ்தான் வீரர் ஷாநவாஸ் தவானி இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்படுகிறது.
ஜடேஜாவுக்குப் பதிலாக அக்சார் பட்டேல் இந்திய குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். ஷாநவாஸ் தஹானிக்குப் பதிலாக ஹசன் அலி அல்லது மொஹமத் ஹஸ்நய்ன் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இன்றைய போட்டியில் இந்திய அணியில் விக்கெட் காப்பாளராக யார் விளையாடப் போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. ரிஷாப் பன்டா அல்லது தினேஷ் கார்த்திக்கா விளையாடப் போகிறார் என்பது இன்னும் சற்று நேரத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
அணிகள் (பெரும்பாலும்)
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), கே. எல். ராகுல், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பன்ட் அல்லது தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், புவ்ணேஷ்வர் குமார், ஆவேஷ் கான் அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்த்ர சஹால்.
பாகிஸ்தான்: பாபர் அஸாம் (தலைவர்), மொஹமத் ரிஸ்வான், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், குஷ்தில் ஷா, ஷதாப் கான், அசிப் அலி, மொஹமத் நவாஸ், நசீம் ஷா, ஹரிஸ் ரவூப், ஸசன் அலி அல்லது மொஹமத் ஹஸ்நய்ன்.