இலங்கை மின்சார சபையின் நட்டத்தினால் மின்வலுத்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களின் பிரதிபலனை நாட்டு மக்கள் எதிர்கொள்கிறார்கள். 30 இலட்சம் மின்பாவனையாளர்களின் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படலாம் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் 29 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற மின்கட்டண அதிகரிப்பு மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2012ஆம் ஆண்டுக்கு பின்னர் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படவில்லை,எரிபொருள் விலையதிகரிப்பு மற்றும் மின்னுற்பத்திக்கான செலவு அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
மின்பாவனைக்கான கேள்வி குறைவடைந்துள்ளதால் தற்போது மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படும் காலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏழு மாத காலப்பகுதியில் 31 சதவீதமளவில் நீர்மின்னுற்பத்தின் ஊடாகவும்,38 சதவீதம் நிலக்கரி ஊடாகவும்,09 சதவீதம் புதுப்பிக்கததக்க சக்தி வளங்கள் ஊடாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
மின் பாவனைக்கான கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளதுடன் பொருளாதார பாதிப்பும் தீவிரதரமடைந்துள்ளது. எதிர்காலத்தில் மின்பாவனைக்கான கேள்வி அதிகரிக்கும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
2015ஆம் ஆண்டு டீசல் மாபியாக்களினால் பாதிக்கப்பட்டேன்.நிலக்கரி மற்றும் எரிபொருள் மாபியாக்கல் அமைச்சினை முறையாக முன்னெடுத்து செல்ல இடமளிக்கவில்லை. போராட்டங்களுக்கு மத்தியில் எமது பயணத்தை முன்னெடுத்தோம்.
எமது ஆட்சியில் எரிபொருளின் விலையும், மின்கட்டணமும் குறைக்கப்பட்டன. முறையான விலை மனுகோரலின் பயனை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுத்தோம்.
இருப்பினும் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரனத்தையும் வழங்கவில்லை. தற்போதைய மின்கட்டண திருத்தம் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
குறைந்த மின் அலகினை பயன்படுத்தும் சுமார் 30 இலட்சம் மின்பாவனையாளர்களின் மின்கட்டணத்தில் நிவாரனம் வழங்க முடியும் என்றார்.