18 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இரண்டு இந்திய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று (20) அதிகாலை இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதோடு விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 38 வயதுடைய இரண்டு வர்த்தகர்கள் எனவும் அவர்கள் அடிக்கடி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே விமானம் மூலம் சென்று வணிகம் செய்வதாகவும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் நிறையுடைய தங்க நகைகள், அதற்கு மேலதிகமாக அணிந்திருந்த தங்க ஆபரணங்கள், காலணிகள் மற்றும் உள்ளாடைகள் உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தங்க நகைகளுக்கு வெள்ளி முலாம் பூசி உள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.