புதுதில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இம்மாதம் இந்தியாவின் 14 வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் புது தில்லி சென்றிருக்கும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், குடியரசு தலைவர் மாளிகையில் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு முன் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது திமுகவின் மக்களவைத் தலைவர் டி. ஆர். பாலு, தமிழக தலைமை செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனிடையே இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சந்தித்து தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.