தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு என்று இருக்கும் எந்த மிடுக்கும் இல்லாது, மெலிந்த உருவத்தோடு இதுதான் நான் படிச்ச ஸ்கூல்…” என்று சொல்லிக்கொண்டே படத்தின் முதல் காட்சியில் வரும் அந்த இளைஞனைப் பார்த்து, அன்று கேலியாகச் சிரிக்காதவர்கள் சிலர் மட்டுமாகத்தான் இருக்கும், அதே இளைஞனைப் பார்த்து, இன்று வியக்காதவர்கள் வெகு சிலராகத்தான் இருக்க முடியும். அந்தப் படம் ‘துள்ளுவதோ இளமை’, அந்த படத்தில் அறிமுகமான அந்த இளைஞன் தனுஷ்.
இவன்லாம் ஒரு ஹீரோவா…’ என்று அன்று பேசியவர்கள் இன்று இவரை அன்னாந்து பார்த்து நிச்சயம் வியப்பர்.
ஒரு படத்துடன் இவன் சரி இரண்டு படத்துடன் சரி என்று பேசியவர்கள் இன்று நிச்சயம் வாயடைத்துதான் போயிருப்பர். ஏனெனில் இந்தியா சினிமாவில் யாருக்கும் கிடைக்காத மாபெரும் அறிய வாய்ப்பு இன்று தனுஷ்க்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் உயரிய விருதான தேசிய விருதினை இவர் இதுவரை இரண்டு முறை பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலகம் தாண்டி ஹிந்தியிலும் வெற்றிக்கண்டுள்ள தனுஷ் தற்போது உலக சினிமாவில் கால்பதித்துள்ளார். உலகத் திரைப்பட வரலாற்றில் அதிக வசூல் சாதனை படைத்த இயக்குநர்களுடன் தனுஷ் இணைந்துள்ளார்
தி கிரே மேன் படத்தின் மூலம் தனுஷ் ஹொலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.. நாவலை அடடிப்படையாக கொண்டு, உருவான இப்படம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அதிக பட்ஜெட் படமாகும்..
கெப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர்’, ‘சிவில் வோர்’, ‘எவெஞ்சர்ஸ் இன்பினிடி வோர்’ மற்றும் ‘இண்ட் கேம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ. இவர்கள் ரூஸோ சகோதரர்கள் என்ற பெயரில் ஹொலிவூட்டில் பிரபலமானவர்கள்.
இவர்கள் மார்வல் சூப்பர்ஹீரோ திரைப்படங்களில் ‘இனிபினிடி சாகா’ என்று சொல்லப்படும் முதல் மூன்று கட்டங்களைச் சேர்ந்த திரைப்படங்களில் முக்கியமான நான்கு திரைப்படங்களை இயக்கியவர்கள். இதில் கடைசியாக இவர்கள் இயக்கிய ‘எண்ட் கேம்’, உலகத் திரைப்பட வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்கிற சாதனையைப் படைத்தது.
ஹொலிவுட்டில் முன்னணி இயக்குநர்களாகத் திகழ்ந்து வரும் இவர்களின் இயக்கத்தில் தனுஷ் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் பெயர் ‘தி கிரே மேன்'(‘The Gray Man’ ). நடிகர் தனுஷ் ‘அவிக் சான்’ (Avik San) என்னும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இந்த ‘தி கிரே மேன்’ திரைப்படம் கடந்த ஜூலை 22-ஆம் திகதி, உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியானது.
ரூ.1500 கோடி பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய பிரபலங்களுடன் இணைந்து நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அதற்காக நடிகர் தனுஷ் சுமார் மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற தி கிரே மேன் பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குனர்கள் ஆண்டனி மற்றும் ஜோ ரூசோ ஆகியோர் தனுஷை ‘ தேசிய பொக்கிஷம் என்று புகழாரம் சூட்டினர்..
இதையடுத்து இப்படத்தின் ஸ்பின்-ஒப்பாக இதன் முக்கிய கதாபாத்திரங்களை வைத்து தனியாக ஒரு படத்தொடர் ஆரம்பிக்க ரூஸோ சகோதரர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் தனுஷ் மீண்டும் நடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் புதிதாக எடுக்கவிருக்கும் இப்படங்களின் ஒன்றில், தனுஷ் கதாபாத்திரம் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று இயக்குநர் ஜோ ரூஸோ கூறியுள்ளார்.
The Gray Man Teamஇது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் ஜோ ரூஸோ, “உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அனைவரும் ‘The Gray Man’ படத்தை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்படம் ஒரு புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது.
இதில் பல அற்புதமான கதாபாத்திரங்கள் இருப்பதால், இப்படத்தை எடுக்கும்போதே இதில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களை வைத்து தனியாக ஒரு தொடர் உருவாக்கலாம் என்று எண்ணி இருந்தோம். எனவே ‘Netflix’ உடன் இணைந்து இதற்கான ஸ்கிரிப்டைத் தயார் செய்யவுள்ளோம்.
இதில் உள்ள எல்லா கதாபாத்திரங்களும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ரசிகர்கள் விரும்பும் கதாபாத்திரங்களை இந்தப் புதிய தொடரில் கொண்டுவர முடிவு செய்துள்ளோம். இதில் தனுஷின் கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
,இதன் மூலம் மீண்டும் நடிகர் தனுஷ் ஹொலிவூட்டின் சூப்பர்ஹீரோவாக திரையில் தோண்றுவார் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
மும்பையில் நடந்த விழாவில் தனுஷ் நமது தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையிலேயே பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
தனுஷை பொருத்தவரையில் தமிழராக நாம் பெருமை கொள்ளதான் வேண்டும்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருக்க தோற்றம் தேவையற்றது, திறமை போதுமானது என்று நிரூபித்துக் காட்டியவர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். அவருக்கு முன்பே கறுப்பாக இருப்பவர்கள், குண்டாக இருப்பவர்கள் என பலரும் நாயகர்களாக வென்றிருந்தாலும், தனுஷ் முற்றிலும் புதிய வகை நாயகன்.
அத்தனை ஒல்லியான நாயகனை, தமிழ் சினிமா அதுவரை பார்த்ததில்லை. ‘துள்ளுவதோ இளமை’ படத்தை அவருடைய அப்பா இயக்க, அதில் நோஞ்சான் என பிறர் கேலி செய்யும் உடல் அமைப்பை வைத்துக் கொண்டு மாணவனாக நடித்திருப்பார் பிரபு. ஆம், திரைப்படத்துக்காக இவரது பெயர் தனுஷ் ஆனது.
தனுஷின் அண்ணன் செல்வராகவன்தான் இந்தப் படத்தை இயக்கினாலும் வியாபார காரணத்துக்காக தந்தை பெயர் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடினாலும், தனுஷின் தோற்றம் கிண்டல் செய்யப்பட்டது. அதுவும் முதல் காட்சியிலும் கடைசியிலும் ஒட்டு மீசை வைத்துக்கொண்டு நோஞ்சான் உடம்புடன் ஆர்மி மேனாக வந்திருந்ததை சிரித்துக்கொண்டுதான் பலரும் பார்த்தார்கள்.
படத்தில் இசை, ஒளிப்பதிவு, கதை எனப் பல விஷயங்கள் சிறப்பாக இருந்தாலும், படம் வெற்றி பெற்றதற்கு வேறு காரணங்களும் இருந்தன. ‘தனுஷ்-ஷெரின்’ நெருக்கம், பாடல்கள், மாணவப் பருவம் என இந்தப் படம் வேறு விதமாகவே வெளிப்பட்டு வெற்றியும் பெற்றது. இது போன்ற கதையில் நடித்ததால் மட்டுமே, இப்படம் ஓடியது, கதாநாயகனுக்காக இல்லை என்றும் தனுஷ் முதல் படத்தோடு வெளியேறிவிடுவார் என்றுமே பெருமளவில் கணிக்கப்பட்டது. ஆனாலும், துள்ளுவதோ இளமை ஒரு ட்ரெண்ட்டாகியது.
துள்ளுவதோ இளமை வெற்றிக்கு அடுத்து, அண்ணன் செல்வராகவன் இயக்க தம்பி தனுஷ் நடித்த படம் ‘காதல் கொண்டேன்’. முதல் படத்தில் இருந்ததை இதிலும் எதிர்பார்த்துப் போனவர்களுக்குக் கிடைத்தது பெரும் அதிர்ச்சி. ‘இது வேற மாதிரி இருக்கே’ என்ற உணர்வைத் தந்த படம், வெளிவந்தபோது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இன்ப அதிர்ச்சி அது. இவர்களிடமிருந்து இப்படி ஒரு படமா… இந்தப் பையனுக்குள் இப்படி ஒரு நடிகனா… இசை ஒரு படத்தில் இத்தனை பங்காற்ற முடியுமா என்ற அதிர்ச்சி. தனுஷ்-செல்வராகவன்-யுவன் அளித்த அந்தத் தாக்கம் தமிழ்த் திரையுலகில் சில ஆண்டுகள் நீடித்தது. கமல்ஹாசன், பாரதிராஜா, பாலுமகேந்திரா என அந்தப் படத்தைப் பற்றி அனைவரும் பேசினர். இந்தக் கதைக்கு ஏற்ற தோற்றம் தனுஷிடம் மட்டும்தான் அப்போது இருந்தது.
முகத்தில் தாடியுடனும், சோடா புட்டிக் கண்ணாடியுடனும் நடிப்பில் அசத்தியிருப்பார்.. ஒரு ஆதரவற்ற இளைஞனின் மனம் தேடும் அன்பு, அது கைநழுவிப் போகும்போது அடையும் ஏமாற்றம் என உளவியலை வெகு நேர்த்தியாகப் பேசியிருந்தது காதல் கொண்டேன். அதில் தனுஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. மீண்டும் இவர் ஒரு படம் நடித்தால், அதைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்தது. படமும் மிகப்பெரிய வெற்றி. ஆனாலும், மக்களை கவரும் நாயகனான தனுஷ் இல்லை எ ன விமர்சிக்கப்பட்டார்.
‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘சுள்ளான்’ படங்களில் நடித்தார். ‘’சுள்ளான்’ மிகப்பெரிய சறுக்கலைக் கொடுத்தது. ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தில் ‘இந்தியன் புரூஸ்லீ’ என்ற அடைமொழியுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது, பலரையும் தூண்டிவிட்டது.
இன்னொரு பக்கம் சிம்புவின் நேரடி போட்டியாளர் என்ற பெயர் வேறு. இருவருமே பெரிய அளவில் வளராத போதே இத்தனை ஆர்பாட்டம் ஆடம்பரம் தேவையா என பக்குவமான சினிமா ரசிகர்களை முகம் சுளிக்கவைத்தது.
ஆயினும் ’மீண்டும் ‘புதுப்பேட்டை’யில் சரியான பாதைக்குள் நுழைந்தார் தனுஷ். அன்று பெரிதாய் வெற்றி பெறாத புதுப்பேட்டை, இன்று எந்த திரையரங்கில் சிறப்புக் காட்சி போட்டாலும் நிறைகிறது, கொண்டாடப்படுகிறது. மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு வந்த தனுஷ், தன் எல்லைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே போனார். வித்தியாசமான கதைகளில் நடிக்கத் தொடங்கினார். மயக்கம்என்ன ஒரு வித்தியாசமான வெற்றி என்றால்.
ஆடுகளம் அவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி விருதுகளை நோக்கி நகர்ந்தன. ஆறு தேசிய விருதுகளை வென்ற ‘ஆடுகளம்’ பெற்றது. பொல்லாதவனில் தொடங்கிய இவர்களத வெற்றிக்கூட்டணி இன்னும் தொடர்கிறது.
நடிப்போடு நிறுத்தாத தனுஷ் படங்களை தயாரித்தார். இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணைந்து தயாரித்த காக்கா முட்டை திரைப்படம் தேசிய விரதை பெற்றது. விருது கிடைத்ததையடுத்து, காக்கா முட்டையை இயக்கிய மணிகண்டனுக்கும், தேசிய விருது பெற்ற சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கும் நடிகர் தனுஷ் தங்க சங்கிலி பரிசளித்தார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
தனுஷ் பாடல்களையும் பாடினார், பாடல் எழுதினார்… தனுஷின் ‘வை திஸ் கொல வெறி’ உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. தனுஷ் – அனிருத் கூட்டணியில் உருவான ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் யூ டியூப் சேனலில் பல சாதனைகளைப் படைத்தது. அதனை தற்போது தனுஷ் – யுவன் கூட்டணியில் உருவான ‘ரவுடி பேபி’ பாடல் முறியடித்துள்ளது.100 கோடி பார்வைகளைக் கடந்துள்ள முதல் தென்னிந்திய பாடல் என்ற இமாலய சாதனையையும் இப்பாடல் எட்டியுள்ளது
அத்தோடு மொழிகளை கடந்து தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தினார். தனுஷ் தேசிய விருது வாங்கிய கையோடு ‘ஒய் திஸ் கொலவெறி’ கொடுத்த உலகப்புகழும் சேர்ந்து தனுஷை ஹிந்தி உலகுக்கு அழைத்துச் சென்றது. ஆம், தமிழ்ப் படங்களில் மதுரை இளைஞனாகவும், சென்னை இளைஞனாகவும் வளம் வந்தவர். ஹிந்தியில் வாரணாசி இளைஞனாக நடித்து, பாலிவுட் பொக்ஸ் ஒப்பிசில் சேர்ந்தார். இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் கூட இவரது வெற்றி தொடர்ந்தது. ‘இவன்லாம் ஹீரோவா…’ என்று பேசினவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் சினிமாவில் அவர் தொடும் உச்சம் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
வேலையில்லா பட்டதாரி இன்றைய இளைஞர்களின் யதார்த்த நிலையை பேசியது. ‘வடசென்னை’ மற்றும் ‘அசுரன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனுஷின் எழுச்சி என்பது வேறு ஒரு தளத்திற்குச் சென்றுள்ளது. நடிகராகவும் ஆளுமையாகவும் எழுச்சி கண்டுவருகிறார்.
தனுஷ் படங்களை இயக்கியும் வருகிறார். அவர் இணக்கிய பவர் பாண்டி திரைப்படம் மாபேரும் வரவேற்பபை பெற்றது.
இந்திய அளவில் மட்டும் தனுஷின் வளர்ச்சி நிற்கவில்லை. அவரை ஹொலிவூட்டும் இப்போது நாடியுள்ளது ஏற்கனவே 2018ஆம் ஆண்டு, ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஒஃப் தி ஃபகீர்’ என்கிற ஆங்கிலத் திரைப்படத்தில் தனுஷ் டித்திருந்தார் . 71 – ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் தற்போது தனுஷ் மேலும் சிகரத்தின் உச்சை தொட்டுள்ளார்.
உண்மையில் நாம் எப்படி இருந்தாலும் எந்த உருவத்தில் இருந்தாலும் நம்மை யார் என்ன கேலி செய்தாலும் அதனை செவிகளில் வாங்கிக் கொள்ளாமல் நமக்கான பாதையில் நாம் சிறப்புடன் நடந்தாலே போதும். நம்மை தூற்றியவன் அங்கே தான் இருப்பான். நாம் நடந்தால் எல்லைகளை கடக்கலாம் இமயத்தை தொடலாம். இந்த மொத்த உலகும் எம்மை திரும்பி பார்க்கும். என்பதனை தனுஷ் நிரூபித்துள்ளார். வாழ்த்துவோம் நாமும் தனுஷை.