ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் 3ஆவது அத்தியாயத்துக்கான வீரர்கள் ஒதுக்கீட்டுத் தேர்வு (05) மாலை நிறைவுபெற்றது.
விரர்கள் ஒதுக்கீட்டுத் தேர்வின்போது, ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் விளையாடும் உலகப் பிரசித்திபெற்ற வீரர்கள் வாங்கப்படாதபோதிலும் பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்துவரும் இலங்கையின் முன்னணி வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவை எந்த அணியும் வீரர்களுக்கான ஒதுக்கீட்டுத் தேர்வின்போது கருத்தில் கொள்ளாதது வியப்பை தருகிறது.
அத்துடன் உள்ளூரில் பிரபலமான அதிரடி வீரர் குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ (இருவரும் உபாதையிலிருந்து மீளவில்லை), ஓஷத பெர்னாண்டோ, லஹிரு மதுஷன்க, சுழல்பந்துவீச்சாளர் அக்கில தனஞ்சய, வேகப்பந்துவீச்சாளர்களான லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித்த போன்றவர்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை.
இது இவ்வாறிருக்க, நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் அணியில் வட பகுதியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த், அதே கல்லூரியின் முன்னாள் வீரர் சுழல்பந்துவீச்சாளர் தீசன் விதுசன், சென். ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் வீரர் சகலதுறை ஆட்டக்காரர் தெய்வேந்திரம் டினோசன் ஆகியோர் ஜெவ்னா கிங்ஸ் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜெவ்னா கிங்ஸ் அணியின் பயிற்றுநராக தில்லின கண்டம்பி, அணியின் தலைவராக திசர பெரேரா, அணியின் கிரிக்கெட் பணிப்பாளராக ஹெரி வாஹீசன், பெருநிறுவன சந்தைப்படுத்தல், தொடர்பாடல், ஊடக பணிப்பாளராக சாரங்க விஜயரத்ன ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜெவ்னா கிங்ஸ் குழாம்
துடுப்பாட்ட வீரர்கள்: அஷான் ரந்திக்க, எவின் லூயிஸ் (மே.தீ.), நிப்புன் தனஞ்சய, சதிர சமரவிக்ரம.
சகலதுறை வீரர்கள்: திசர பெரேரா (தலைவர்), ஷொயெப் மாலிக் (பாகிஸ்தான்), துனித் வெல்லாலகே, தனஞ்சய டி சில்வா, தெய்வேந்திரம் டினோசன், சுமிந்த லக்ஷான்.
விக்கெட் காப்பாளர்கள்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), ட்ரைஸடன் ஸ்டப்ஸ் (தெ.ஆ.).
பந்துவீச்சாளர்கள்: மஹீஷ் தீக்ஷன, ப்ரவீன் ஜயவிக்ரம, ஷனாவாஸ் தஹானி (பாகிஸ்தான்), பினுர பெர்னாண்டோ, ஹார்டஸ் வில்ஜொயன் (தெ.ஆ.), டில்ஷான் மதுஷன்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், தீசன் விதுசன்.
கோல் கிளடியேட்டர்ஸ் குழாம்
இமாத் வசிம், தனுஷ்க குணதிலக்க, பாஹீம் அஸ்ரப், துஷ்மன்த சமீர, ஜான்மன் மாலன், காய்ஸ் அஹ்மத், அஸாம் கான், குசல் மெண்டிஸ், லக்ஷான் சந்தகான், நுவன் துஷார, சப்ராஸ் அஹமத், புலின தரங்க, நுவனிது பெர்னாண்டோ, நிமேஷ் விமுக்தி, மொவின் சுபசிங்க, நிப்புன் மலிங்க, லக்ஷான் கமகே, தரிந்து கௌஷால், சம்மு அஷான்.
கலம்போ ஸ்டார்ஸ் குழாம்
ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், அசிவ் அலி, சரித் அசலன்க, டொமினிக் ட்ரேக்ஸ், பஸால்ஹக் பறூக்கி, நவீன் உல் ஹக், நிரோஷன் திக்வெல்ல, தினேஷ் சந்திமால், தனஞ்சய லக்ஷான், கரிம் ஜெனட், சீக்குகே ப்ரசன்ன, ஜெவ்றி வெண்டர்சே, இஷான் ஜயரட்ன, முடித்த லக்ஷான், லக்ஷித்த மனசிங்க, கெவின் கொத்திகொட, நவோத் பரணவித்தான, சமோத் பட்டகே.
தம்புள்ள ஜயன்ட்ஸ் குழாம்
டி’ஆர்ச்சி ஷோர்ட், தசுன் ஷானக்க, பென் கட்டிங், பானுக்க ராஜபக்ஷ, சந்தீப் லெமிச்சான், டிம் சீவேர்ட், ஹய்தர் அலி, சத்துரங்க டி சில்வா, ரமேஷ் மெண்டிஸ், நுவன் ப்ரதீப், ஷெல்டன் கொட்ரெல், தரிந்து ரத்நாயக்க, ப்ரமோத் மதுஷான், லசித் குரூஸ்புள்ளே, கலன பெரெரா, டிலும் சுதீர, சச்கித்த ஜயதிலக்க, துஷான் ஹேமன்த, சஷா டி அல்விஸ், ரவிந்து பெர்னாண்டோ.
கண்டி பெல்கன்ஸ் குழாம்
கார்லோஸ் ப்ரத்வெய்ட், வனிந்து ஹசரங்க, பேபியன் அலன், சாமிக்க கருணாரட்ன, அண்ட்ரே ப்ளெச்சர், டிவோல்ட் ப்ரெவிஸ், கிறிஸ் க்றீன், இசுரு உதான, மதீஷ பத்திரண, அஷேன் பண்டார, உஸ்மான் ஷின்வாரி, கமிந்து மெண்டிஸ், அஷான் ப்ரியஞ்சன், மினோத் பானுக்க, அவிஷ்க பெரேரா, அஷேன் டெனியல், மலிந்த புஷ்பகுமார, ஜனித் லியனகே, லசித் அபேரட்ன, கவின் பண்டார.
வீரர்களுக்கான ஒப்பந்தத்தொகை
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் வகைப்படுத்தப்பட்ட விரர்கள் பல்வேறு பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது ஒப்பந்த விலையும் வெளியிடப்பட்டுள்ளது.
இன்டர்நெஷனல் (சர்வதேச) ரூபி மற்றும் இலங்கை ரூபி பிரிவுகளில் இடம்பெறும் வீரர்களுக்கு 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் இன்டர்நெஷனல் சவயர் மற்றும் இலங்கை சவயர் பிரிவுகளில் இடம்பெறும் வீரர்களுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் ஒப்பந்த விலையாகும்.
இன்டர்நெஷனல் டயமண்ட் A, B மற்றும் இலங்கை டயமண்ட் A, B பிரிவுகளில் இடம்பெறும் வீரர்களுக்கு முறையே 40 ஆயிரம் டொலர்களும் 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் ஒப்பந்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெஷனல்பிளட்டினம் மற்றும் இலங்கை பிளட்டினம் பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களும், இலங்கை கோல்ட் பிரிவில் உள்ள வீரர்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் இலங்கை சில்வர் 1, 2, 3 மற்றும் 4 பிரிவுகளில் உள்ள வீரர்களுக்கு 3000 அமெரிக்க டொலர்களும் ஒப்பந்த விலைகளாகும்.
எல்பிஎல் இருபது 20 கிரிக்கெட் மூன்றாவது அத்தியாயம் ஜுலை 31ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 21ஆம் திகதிவரை நடைபெறும். முதல் சுற்று ஆட்டங்கள் கொழும்பிலும் இறுதிச் சுற்று ஆட்டங்கள் ஹம்பாந்தோட்டையிலும் நடைபெறவுள்ளன.