சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தின் நான்காம் கட்டத்தில் ‘க்ளமர் போய்ஸ்’ என்ற பெயரை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில் அற்புத ஆற்றல்களுடனும் வைராக்கியத்துடனும் விளையாடி செரெண்டிக் கழகத்தை முதல் தடவையாக தோல்வி அடையச் செய்த சோண்டர்ஸ் கழகம், இரண்டாவது வெற்றியை ஈட்டும் குறிக்கோளாகக் கொண்டு இ.போ.ச. கழகத்தை காலியில் இன்று சனிக்கிழமை (02) எதிர்த்தாடவுள்ளது.
இதேவேளை, ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்து அதன் பின்னர் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ள நிகம்போ யூத் கழகம், குருநாகலில் நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் மாவனெல்லை செரெண்டிப் கழகத்தை எதிர்த்தாடவுள்ளது.
மாறுபாடான பெறுபேறுகளை பெற்றுள்ள நியூ ஸ்டார் மற்றும் மொரகஸ்முல்ல கழகங்கள் கொழும்பு சுகததாச அரங்கில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.
சோண்டர்ஸ் – இ.போ.ச.
செரெண்டிப் கழகத்துக்கு எதிராக கடந்த வாரம் கோல் மழை பொழிந்து சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் தனது முதலாவது வெற்றியை சுவைத்த சொண்டர்ஸ் கழகத்துக்கு இ.போ.ச. கழகத்துடனான போட்டியில் மற்றொரு வெற்றி கிடைக்கும் என அனுமானிக்கப்படுகின்றது.
இந்த வருடம் தோல்வி அடையாமல் வெற்றிநடை போட்டுவந்த செரெண்டிப்பை வெற்றிகொண்டதன் மூலம் சோண்டர்ஸ் புத்தணர்ச்சி பெற்ற அணியாக காணப்படுகின்றது.
முதல் மூன்று போட்டிகளில் அளவுக்கு அதிகமாக மூத்த வீரர்களில் நம்பிக்கை வைத்து விளையாடிய சோண்டர்ஸ் கழகம் நான்காவது போட்டியில் இளம் வீரர்களை களம் இறக்கியதன் பலனாக வெற்றிக் கணக்கை ஆரம்பித்தது.
இ.போ.ச. கழகமும் மூத்த வீரர்களில் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதால் அதன் வேகம் போதுமானதாக அமையவில்லை.
மத்தியஸ்தரின் தயவால் சென். மெரிஸ் கழகத்துடனான போட்டியில் வெற்றிபெற்ற இ.போ.ச., தனது இரண்டாவது போட்டியில் கிறிஸ்டல் பெலஸை வெற்றிகொண்டிருந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் 1 – 0 என்ற கோல் வித்தியாசத்திலேயே இ.போ.ச. வெற்றிபெற்றிருந்தது. மொரகஸ்முல்லை, பெலிக்கன்ஸ் ஆகிய கழகங்களிடம் படுதோல்விகளைத் தழுவியது.
எனவே, சோண்டர்ஸ் கழகத்துடனான போட்டியில் இ.போ.ச. வெற்றிபெறும் என்று எதிர்பார்க்க முடியாது.
செரெண்டிப் எதிர் நிகம்போ யூத்

கானா விரர் அவன்டே இவான்ஸின் ஆற்றல்கள் மூலம் முதல் மூன்று போட்டிகளில் செரெண்டிப் கழகம் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வந்தது. ஆனால், கடந்த வாரம் சோண்டர்ஸுக்கு எதிரான போட்டியில் இவான்ஸ் உபாதைக்கு மத்தியில் விளையாடியதால் அவரால் எதையும் சாதிக்க முடியாமல் போனதுடன் செரெண்டிப் கழகம் முதல் தடவையாக தோல்வியைத் தழுவியது.
இந் நிலையில், இந்த வாரம் நிகம்போ யூத் கழகத்தை குருநாகல் மாளிகாபிட்டி மைதானத்தில் செரெண்டிக கழகம் இன்று சனிக்கிழமை (02) எதிர்த்தாடவுள்ளது.
தனது ஆரம்பப் போட்டியில் மாத்தறை சிட்டி கழகத்திடம் தோல்வி அடைந்த நிகம்போ யூத் அதன் பின்னர் தொடர்ச்சியாக சொலிட், பொலிஸ், கிறிஸ்டல் பெலஸ் ஆகிய கழங்களை வெற்றிகொண்டிருந்தது.
எவ்வாறாயினும் செரெண்டிக் கழகமும் நிகம்போ யூத் கழகமும் கிட்டத்தட்ட சமபலம் கொண்ட அணிகளாக இருப்பதால் இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என அறுதியிட்டு கூறமுடியாது. ஆனால், போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
நியூ ஸ்டார் – மொரகஸ்முல்ல

நியூ ஸ்டார் கழகத்துக்கும் மொரகஸ்முல்ல கழகத்துக்கும் இடையிலான சம்பியன்ஸ் லீக் போட்டி கொழும்பு சுகததாச அரங்கில் சனிக்கிழமை (02) நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு கழகங்களும் அதிர்ஷ்டவசமாக தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன.
தனது ஆரம்பப் போட்டியில் கிறிஸ்டல் பெலஸை வெற்றிகொண்ட நியூ ஸ்டார் கழகத்துக்கு அதன் பின்னர் நடைபெற்ற 3 போட்டிகளிலும் வெற்றிபெற முடியாமல் போயுள்ளது.
எவ்வாறாயினும் இந்த இரண்டு கழகங்களில் நியூ ஸ்டார் கழகம் சற்று பலம்வாய்ந்ததாகத் தென்படுவதால் அவ்வணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறத்தில் மொரகஸ்முல்ல கழகம் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடினால் போட்டியில் எதிர்பாராத முடிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.