அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டடவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம் பெற்றிருக்கும் நிலையில், அரசியலமைப்பு முறைமையை நிலைநாட்டுவதற்கு இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்படவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஒன்றுதிரண்ட குழுவினர், அலரி மாளிகைக்கு முன்பாக காலி வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ கூடாரங்களை இடித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாகத் தாக்கினர்.
அதனைத்தொடர்ந்து காலி வீதியின் ஊடாக காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’விற்குச் சென்று அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து, போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். அதனையடுத்து நாடளாவிய ரீதியில் வன்முறைகள் வெடித்து அமைதியற்ற நிலையொன்று தோற்றம் பெற்றுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
‘அரசியலமைப்பு முறைமையை நிலைநாட்டுவதற்கு இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்படவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு எதிரான வெளிநாட்டு சக்திகள் மக்களின் கோபத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றன. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது அந்த டுவிட்டர் பதிவிற்குக் கீழ் பின்னூட்டங்களை வெளியிட்டிருக்கும் இலங்கையர்கள், இந்திய இராணுவத்தை அனுப்பிவைக்கவேண்டும் என்ற அவரது கருத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.