அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான பொதுமக்களின் உரிமையானது அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
எனவே சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளைப் பயன்படுத்தி அத்தகைய போராட்டங்களை அடக்குவதற்கு முயற்சிப்பதென்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த வாரம் சனிக்கிழமை (9) கொழும்பு – காலிமுகத்திடலில் பெருமளவான இளைஞர், யுவதிகள், பல்துறைசார்ந்தோர் ஒன்றிணைந்து ஆரம்பித்த போராட்டம் நாளுக்குநாள் விரிவடைந்து, நேற்றுடன் 8 ஆவது நாளைப் பூர்த்திசெய்திருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் நேற்றைய தினம் காலை காலிமுகத்திடலில் மக்களின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பொலிஸ் கனரக வாகனங்கள் பிரசன்னமாகி, அங்கேயே நிறுத்தப்பட்டன.
அதனையடுத்து பொலிஸ் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் புகைப்படத்துடன்கூடிய விபரங்கள் உடனடியாகவே சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டன.
அமைதியான முறையில் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் குழப்பம் விளைவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கண்டனம் வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நண்பகல் வேளையில் அவ்வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.
இச்சம்பவங்களைத் தொடர்ந்து கருத்தொன்றை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்பட்டுள்ள உரிமைகளில் ஒன்றான அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களை சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளைப் பயன்படுத்தி அடக்குவதென்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்பதை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை அரசாங்கத்தினால் அத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமேயானல், அவற்றைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]