பொதுமக்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில் குழப்பத்தைத் தோற்றுவிக்கும் வகையிலான சட்டவிரோதக் கட்டளைகளை ராஜபக்ஷ அரசாங்கம் பிறப்பிக்குமேயானால், அவற்றை நிறைவேற்றுவதற்கு முன்னர் நூறுமுறை சிந்தித்துப்பாருங்கள் என்று பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா வலியுறுத்தியிருக்கின்றார்.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா, அதில் மேலும் கூறியிருப்பதாவது:
பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகிய நீங்கள் இருவரும் தீவிரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான மனிதாபிமான செயன்முறையில் எனது கட்டளையின்கீழ் செயற்பட்டீர்கள்.
எனவே தற்போது நாட்டில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் மிகவும் அமைதியான போராட்டத்தில் குழப்பம் விளைவிப்பதற்காக ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளால் வழங்கப்படும் சட்டத்திற்கு முரணான கட்டளைகள் தொடர்பில் நீங்கள் நூறுமுறை சிந்திப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
ஊழல்மிகுந்த, செயற்திறனற்ற நிர்வாகத்தின் விளைவாக இந்த நாட்டில் தமது வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்வதில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மற்றும் அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் அமைதியானதும், வன்முறைகளற்றதுமான விதத்திலும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்கள்.
எனவே தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சிக்கும் ராஜபக்ஷ அரசாங்கம் அப்பாவி பொதுமக்கள்மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு எந்தவொரு முயற்சியை மேற்கொண்டாலும், அது இந்த உலகிலேயே மிகவும் மோசமான செயற்பாடாகும்.
மனிதாபிமான செயன்முறையில் எனது கட்டளையின்கீழ் செயற்பட்ட வீரர்கள், ஒட்டுமொத்த உலகின்முன் அவமானப்படுத்தப்படுவார்கள் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
ஆகவே மிகமோசமான ஆட்சியாளர்களால் பிறப்பிக்கப்படும் மக்கள் விரோத கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு முன்னர் நூறுமுறை சிந்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று அப்பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]