எரிபொருளின் தரம் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை. தரம் தொடர்பில் பிரச்சினை இருந்தால் முறையிடலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஆய்வு பிரிவு முகாமையாளர் நளின் சந்திரசிறி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எரிபொருள் இறக்குமதி செய்யும்போதே எமது தரம் தொடர்பில் நாங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்புகின்றோம்.
அதேபோன்று எரிபொருள் கப்பலுக்கு ஏற்றும்போது அதுதொடர்பான தரம் பரிசோதிக்கப்பட்டு எமக்கு அறிக்கை வழங்குவார்கள். அதன் பின்னர் கப்பலில் வரும்போது அதற்கு குறித்த கம்பனி பொறுப்பேற்கின்றது.
அதேபோன்று எரிபொருள் கப்பல் இங்குவந்து நங்கூரமிட முன்னர் அதில் இருக்கும் எரிபொருளின் தரம் தொடர்பில் மாதிரி பெற்றுக்கொள்ளப்படுகின்றது. அதன் பின்னரே எரிபொருளை இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
மேலும் எரிபொருள் களஞ்சியப்படுத்துவதற்கு முன்னர் மீண்டும் தரம் தொடர்பாக சிபெட்கோ நிறுவனமும் எமது ஆய்வு பிரிவும் பரிசோதனை செய்தே களஞ்சியப்படுத்துகின்றோம். அதேபோன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் மீண்டும் அதன் தரம் தொடர்பில் ஆய்வு செய்தே வெளியில் அனுப்புகின்றோம்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் தொகை 4தடவைகள் பகுப்பாய்வுக்கு உட்பட்டு அதன் தரம் உறுதிசெய்யப்பட்ட பின்னரே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.
அவ்வாறு இருந்தும் எரிபொருள் தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அதிகாரசபை எமது கூட்டுத்தாபனத்துக்கு வந்து, எமது ஆய்வு அறிக்கைகளை பரிசோதித்து பார்த்தது.
ஆனால் அவ்வாறான எந்த தவறும் காணப்படவில்லை. என்றாலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏதாவது மோசடிகள் மேற்கொள்வதை யாராவது கண்டால் அதுதொடர்பில் எமக்கு முறையிடலாம்.
ஆனால் அவ்வாறன எந்த முறைப்பாடும் எமக்கு கிடைக்கவில்லை. என்றாலும் தரம் தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாங்கள் 152 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் மாதிரியை பெற்றுக்கொண்டு, ஆய்வு செய்துபார்த்தோம். ஆனால் எந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் கலப்படம் செய்தமைக்கான தகவல் கிடைக்கவில்லை.
அத்துடன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குமான எரிபொருள் முத்துராஜவல மற்றும் கொலண்ணாவ களஞ்சிய நிலையங்களில் இருந்தே எரிபொருள் விநியோகிகப்படுகின்றது.
அதனால் ஐ.ஓ.சி மற்றும் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருள் ஒரே தரத்தை கொண்டதாகும். அதில் எந்த வித்தியாசமும் இல்லை என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]