Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் முதலீட்டுக்கு வரமாட்டார்கள் | எம்.ஏ.சுமந்திரன்

March 30, 2022
in News, Sri Lanka News
0
புதிய அரசியலமைப்பு தொடர்பில் TNA மகாநாயக்கருடன் கலந்துரையாட தீர்மானம்.

இந்த நாட்டிலே தமிழ்த் தேசிய பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும் வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சில முக்கிய சந்திப்புகளில் கலந்து கொண்டிருந்தோம். அத்துடன் பல இராஜதந்திரிகளின் விஜயங்கள் கூட இடம்பெற்றன.

அந்தவகையில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கும் அமெரிக்க இராஜதந்திரிகள் சிலர் விக்டோரியா நூலன் என்கின்ற துணை இராஜாங்க செயலாளர் உட்பட மூன்று இராஜதந்திரிகள் விஜயம் செய்து ஜனாதிபதி உள்ளிட்டோரைச் சந்தித்துச் சென்றிருக்கின்றார்கள்.

கடந்த நவம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவையும் இணைந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலே நடத்திய சந்திப்பின் போது தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதிச் செயலாளர் டொனால்ட்டு, இவ்வாறான உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு வரும் என்று சொல்லியிருந்தவர்.

அதனைத் தொடர்ந்து நேற்றையதினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் சந்திப்பை நடத்தியிருந்தோம்.

அவர் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடனும் சந்திப்பை நடத்தியிருக்கின்றார். தமிழ்த் தரப்பில் மலையகத் தரப்பு சார்பில் மனோகணேசன் தலைமையிலான குழுவையும் முஸ்லிம் கட்சிகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

எங்களுடன் நேற்றையதினம் நடாத்திய உரையாடலிலே மிக முக்கியமாகக் கடந்த 25ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை சம்மதமாகப் பேசப்பட்டது.

இது சம்மந்தமாக எங்களுக்கு முன்னர் ஜனாதிபதியைச் சந்தித்ததாகவும், நாங்கள் தெரிவித்த விடயத்தை ஜனாதிபதி ஏற்கனவே சொல்லியிருப்பதாகவும் உடனடி விடயங்கள் சம்மந்தமாக ஏற்பட்டிருக்கும் இணக்கப்பாடு அல்லது வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று இந்தியாவிற்கு உறுதியளித்ததாகவும் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்.

அந்த உடனடி விடயங்களில் நீண்டகால தமிழ் அரசியற் கைதிகளின் விடுவிப்பு சம்மந்தமாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நீதியமைச்சரும் நானும் இது சம்மந்தமாக ஒவ்வொருவர் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எங்களின் சிபாரிசினைச் செய்வோம்.

அதுபோல் அண்மையில் கைது செய்து விசாரணை இல்லாமல் இருப்பவர்களை ஏற்கனவே விடுவிப்பதாகச் சொன்னார்கள். அந்த விடயத்தை மிகத் துரிதமாகச் செய்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படாவிட்டால் அவர்கள் தொடர்பில் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

நில அபகரிப்பு தொடர்பில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். வெவ்வேறு சட்டங்களின் அடிப்படையில் எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர்கள் இணங்கினார்கள்.

அதற்கப்பால் நிர்வாக எல்லைகளை மாற்றுகின்ற முயற்சி நடைபெறுகின்றது. அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பைத் தாம் உடனடியாக வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இராணுவத் தேவைக்காகப் புதிய சுவீகரிப்புகள் செய்யப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கென்று ஒரு விசேட அபவிருத்தி நிதியமொன்று உருவாக்குவதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது.

அது எவ்வாறு என்ற விடயங்கள் இன்னும் பேசப்படவில்லை. இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பேசி முதலீட்டாளர்களை எவ்வாறு வருவிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடுவோம். இந்த ன்கு விடயங்கள் சம்மந்தமாக அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது. இத்துடன் மேலும் முக்கிய விடயங்கள் குறித்தும் பேசி முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு தலைப்புகளின் கீழும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். அதிலே பல விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. சில உதாரணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. விரிவான பேச்சுக்கள் இனிவரும் காலங்களில் நடைபெறும். நிருவாக எல்லைகள் சம்மந்தமாகவும் நாங்கள் பேசியிருக்கின்றோம்.

அதிலே கல்முனை வடக்கு சம்மந்தமான விடயம் உள்ளிட்டவையும் பேசப்பட்டன. அவை தொடர்பில் விவரமாகச் சொல்லப்படாவிட்டாலும் இனிவரும் நாட்களில் அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் பேசும் போது அந்த விடயத்தைப் பற்றியும் பேசுவோம். மகாவவலி இடங்கள், மாவட்ட, பிரதேச செயலக எல்லைகள் மாற்றியமைக்கின்ற விடயங்கள் பற்றியும் இனிவரும் காலங்களில் பேசுவோம்.

ஆனால் அவையெல்லாம் உடனடியாக நிறுத்தப்படும் என்கிற வாக்குறுதி எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவிக்கும் போது இது நல்ல விடயங்கள் உடனடி விடயங்களுக்கான தீர்வை விரைவாகப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சியை நாங்களும் எடுக்க வேண்டும் என்ற ஆலோசனை எங்களுக்கு வழங்கப்பட்டது.

அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்தவுடன் அரசியற் தீர்வு விடயம் பற்றிப் பேசலாம் என்ற விடயம் சொல்லப்பட்டிருந்தது.

அந்த அறிக்கை வந்து அதற்கு அவர்கள் பேசுவதற்குத் தயாராகின்ற போது நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் இறுக்கமாக இருந்து பேசுங்கள். அதற்கு முன்னதாக அவர்கள் இணங்கிய விடயங்களைச் செய்வதற்கு உங்கள் ஒத்துழைப்புகள் தேவையான இடங்களில் உங்கள் ஒத்துழைப்புகளை வழங்குங்கள் என்றும் சொல்லியிருக்கின்றார்.

இதற்கு மேலதிகமாக அனைத்துக் கட்சிகள் தொடர்பான கூட்டமொன்றும் நடைபெற்றது. நாட்டின் தற்போது பொருளாதார நிலைமைகள் குறித்து ஆராயும் முகமாக அது கூட்டப்பட்டது. பல எதிர்க்கட்சிகள் அதனைப் பகிஷ்கரித்தன. அரசாங்கத்தில் இருக்கும் இரண்டு கட்சிகள் கூட இதனைப் பகிஷ்கரித்தன.

ஆனால் இது அரசாங்கத்தைப் பொருத்த ஒரு விடயம் அல்ல. முழு நாட்டையும் நாட்டு மக்களையும் தமிழ் மக்கள் உட்பட அனைவரையும் மிக மோசமாகப் பாதிக்கும் ஒரு விடயம். அந்த விடயத்தை அரசாங்கம் பார்த்துக் கொள்ளட்டும் என்று சொல்லி இருக்க முடியாது.

பொறுப்பான ஒரு அரசியற் கட்சியாகப் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகளாக இந்த விடயம் குறித்தும் அரசாங்கத்தோடு பேச வேண்டிய அத்தியாவசியத் தேவை இருந்தது.

எனவே நாங்கள் அதில் கலந்து கொண்டு எங்கள் முன்மொழிவுகளை, சிபாரிசுகளைச் சொல்லியிருக்கின்றோம். இனிவரும் நாட்களிலே தொடர்ச்சியாக நடைபெறுகின்ற அந்தக் கூட்டங்களிலும் நாங்கள் பங்குபற்றுவோம்.

கேள்வி : ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பு திருப்திகரமானதாக இருந்ததா?

பதில் : திருப்திகரமாக இருந்ததா? இல்லையா? என்பது பற்றி பலர் கேட்டிருக்கின்றார்கள். நான் அதற்குப் பதில் சொல்லவில்லை. முதலாவது கூட்டத்திற்குப் போய் வந்து விட்டு கூட்டம் திருப்திகரமானதாக இருந்ததா, இல்லையா என்று பதில் சொல்ல முடியாது. ஒரு கூட்டத்திற்குச் சென்றிருக்கின்றோம்.

அதில் சில வாக்குறுதிகள் கொடுத்திருக்கின்றார்கள். சிலர் கேட்கின்றார்கள் இந்த வாக்குறுதிகளை நம்புகின்றீர்களா என்று இது பொருத்தமற்ற ஒரு கேள்வி. நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவர்கள் வாக்குறுதி வழங்கியிருக்கிறார்கள். அதனை அவர்கள் நிறைவேற்றுவார்களா என்று பார்ப்போம் அவ்வளவு தான்.

நாங்கள் நம்பி வாக்குறுதிகளைப் பெறுவதில்லை. ஆனால் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கின்றது.

நம்பினால் மட்டும் தான் பேச வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். ஒருவரை நம்பிப் பேச வேண்டிய தேவை இல்லை. அதிகாரம் அவர்கள் கையிலே இருக்கும் போது நாங்கள் அவர்களுடன் தான் பேச வேண்டும். நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

கேள்வி : பல சிக்கல்களில் இருக்கும் இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டது என வடக்கு கிழக்கில் உள்ள சில தமிழ்க் கட்சிகளும், காணாமல் போனோர் சம்மந்தமான அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. இது தொடர்பில் உங்கள் பார்வை?

பதில் : அவர்கள் எதை வைத்து அவ்வாறு சொல்கின்றார்கள் என்று தெரியவில்லை. அரசாங்கத்தில் இருப்பவர்களுடன் தான் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டும். நீண்டகாலமாக அரசாங்கம் எங்களோடு பேச வேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம்.

அண்மையில் கூட நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்துத் தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களும் ஜனாதிபதி எங்களுடன் பேச வரவேண்டும் என்றே ஆர்ப்பாட்டம் செய்தோம். பேசவாருங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு அவர் பேச்சுவார்த்தைக்குத் திகதி கொடுக்கும் போது பேச மாட்டோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது என்று தெரியவில்லை.

ஒருவருடன் பேசுவதனால் அவரைச் சர்வதேசத்தில் தூக்கி நிறுத்துவதாக நான் நினைக்கவில்லை. தற்போது உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் நடக்கும் பேச்சுவார்த்தை ஒருவரை ஒருவர் பாதுகாப்பதற்காக நடக்கும் பேச்சுவார்த்தையா? இல்லையே, எனவே பேச வேண்டிய நேரத்தில் பேசத்தான் வேண்டும்.

கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் டெலோ கட்சி ஏன் வேறொரு நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

பதில் : இதற்கு டெலோதான் பதில் சொல்ல வேண்டும் அவர்களிடம் கேட்கும் கேள்வியை என்னிடம் கேட்டால் நான் எவ்வாறு பதில் சொல்ல முடியும். அவர்கள் ஏன் வேறொரு நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி : வடமாகாணத்திலுள்ள மூன்று தீவுகளை உற்பத்தி செயற்பாடொன்றுக்காக இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

பதில் : இதனை நாங்கள் வரவேற்கின்றோம். நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கின்றோம். இந்தியத் திட்டங்கள், இந்திய முதலீட்டுத் திட்டங்கள் வடக்கு கிழக்கில் வருவதை நாங்கள் முற்ற முழுதாக வரவேற்கின்றோம். அது எங்களுக்குப் பலமாக இருக்கும். ஆகையினாலே இந்தியாவிற்கு இந்தத் திட்டங்கள் கொடுக்கப்பட்டது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

கேள்வி : ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது சர்வதேச விசாரணை வேண்டுமென்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட அதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக உள்ளக விசாரணைகளை வலியுறுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறாயின் சர்வதேச விசாரணையைக் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளக விசாரணைக்கு இணங்கிவிட்டதா?

பதில் : உள்ளக விசாரணை என்று நாங்கள் சொல்லவே இல்லை. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை நீங்கள் பார்த்தீர்களாக இருந்தால், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும் என்று தான் சொல்லியிருக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக சட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கே நடத்தப்படுகின்ற விசாரணைகளில் சர்வதேச நிபுணர்களும் பங்குபெறலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

எனவே அந்த அலுவலகத்தினூடாக நடத்தப்படுகின்ற விசாரணையாக இருக்கலாம் அல்லது வேறு ஒரு பொறிமுறையாக இருக்கலாம் அல்லது இந்த விசாரணை சம்மந்தமாக அவர்களுக்குள்ளேயே இரு நிலைப்பாடு வந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினூடாக விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்று அமைச்சர் பீரிஸ் சொன்னார்.

தென்னாப்பிரிக்காவின் உதவியோடு நாங்கள் உண்மை கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்குகின்றோம் அதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று சொன்னார்கள்.

இந்த இரண்டிலும் சர்வதேச ஈடுபாடு இருக்கின்றது. ஆகையினால் விசாரணை வேண்டும் என்று நாங்கள் கோரியதற்கு அரசாங்கம் அதற்கு இணங்கியமையை வைத்துக் கொண்டு உள்ளக விசாரணைக்காக நாங்கள் கோரிக்கை வைத்தோம் என்று சொல்வது எந்தவிதத்திலும் நியாயமான கூற்று அல்ல.

கேள்வி : இந்தியாவின் முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளச் செய்வது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதா? அதிலும் குறிப்பாகப் புலம்பெயர் முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடுகளை மேற்கொள்ளாமல் இந்தியாவிலுள்ள முதலீட்டாளர்களின் ஊடாக அந்த முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் ஏதும் உள்ளனவா?

பதில் : நான் சென்னைக்குச் சென்ற போது தமிழ் நாட்டின் நிதியமைச்சரோடு நீண்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாகப் பல முன்னெடுப்புகள் தற்போது நடைபெறுகின்றன. அதிலொன்று தமிழ்நாட்டிலிருந்து வரும் முதலீட்டாளர்கள் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களையும் இணைத்துக் கொண்டு வருகின்ற திட்டமும் இருக்கின்றது. அந்தப் பொறிமுறையொன்றை ஏற்படுத்த நாங்கள் முயல்கின்றோம்.

அதிலே நேரடியாக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பாத இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தினர் தமிழ்நாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து வர விரும்பினால் அதற்கான ஒரு வழியையும் நாங்கள் ஏற்படுத்துகின்றோம்.

ஆனால் இது எல்லாவற்றிற்கும் முன்னர் சர்வ கட்சி மாநாட்டிலே இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நான் சொன்ன ஒரே ஒரு விடயம் இந்த நாட்டிலே தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள் என்பதை நான் சொல்லியிருந்தேன்.

அதுமட்டுமல்லாது ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இன்னுமொரு விடயத்தையும் நான் கூறியிருந்தேன். புலம்பெயர்ந்த மக்கள் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்தவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை.

ஆகையால்; இந்த விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அவர்கள் வருவார்கள் என்று திடீரென பகல் கனவு காண வேண்டிய அவசியம் கிடையாது. அரசியற் தீர்வொன்று நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டால் தான் அதைப்பற்றி நாங்கள் பேச முடியும்.

கேள்வி : இலங்கை மீது சர்வதேசத்தின் பாரிய அழுத்தம் இருக்கும் இந்த நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் என்ற தொனியை ஏற்படுத்தி தம்மீதான அழுத்தங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கப்படுவதாக நீங்கள் சந்தேகிக்கின்றீர்களா?

பதில் : எங்களோடு பேச்சுவார்த்தை நடத்திய காரணத்தினால் நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கவாரங்கள் எல்லாம் மாறப்போவதில்லை. கொடுத்த கடன் குறையப் போவதில்லை. ஆகையால் அதற்கும் இதற்கும் சம்மந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

அந்தப் பொருளாதார நிலையிலிருந்து மீள்வதற்கு வேறு பல விடயங்களை அரசாங்கம் செய்ய வேண்டியதாக இருக்கின்றது. கடன் கொடுத்த நாடுகளுடன் அமைப்புகளுடன் அந்தக் கடன்களை மீளமைப்பதற்கான முயற்சிகளைத் தான் செய்ய வேண்டுமே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதால் அந்த நிலைமை மாறப்போவதில்லை.

கேள்வி : வடக்கில் சீனாவின் ஆதிக்கம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் ஏதும் தெரிவிக்கப்பட்டதா?

பதில் : அது தொடர்பில் நாங்கள் விசேடமாகத் தெரிவித்தோம். நாங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் இனப்பரம்பலை மாற்றுவதற்கான முயற்சிதான் இது என்று உதாரணங்களுடன் சுட்டிக் காட்டினோம். அந்த விடயங்களை நிறுத்துவதற்கும் உறுதியளித்திருக்கின்றார்கள்.

கேள்வி : அண்மைக்காலமாகக் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் செயலணி மற்றும் மயிலத்தமடு, மாதவணை போன்ற பிரச்சனைகள் விஸ்வரூபமாக இருந்து வருகின்றன. இது தொடர்பில் ஜனாதிபதியிடம் ஏதும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டனவா?

பதில் : அவை சம்மந்தமாகவும் பேசினோம். மயிலத்தமடு, மாதவணை விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மிக விவரமாக எடுத்துச் சொன்னார். அத்துடன் தென்னை மரவாடியில் மக்களைப் பயிர் செய்யவிடாமல் தடுப்பது தொடர்பிலும் எடுத்துச் சொன்னோம். அதன்போது ஒரு உத்தரவு கொடுக்கப்பட்டது.

நீண்டகாலமாகப் பயிர்செய்யும் இடத்தை எந்தத் திணைக்களமும் தடுக்கக்கூடாது. பிரதேச செயலாளரின் அத்தாட்சி கொடுக்கும்பட்சத்தில் அந்த நடவடிக்கையை எந்தத் திணைக்களமும் தடுக்கக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிப்பதாகச் சொல்லியிருக்கின்றார்.

ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைத் தான் நான் சொல்லுகின்றேனே தவிர அது நான் கொடுக்கின்ற வாக்குறுதி அல்ல. பலர் அதனைத் தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது என்று. அவ்வாறல்ல ஜனாதிபதி எங்களிடம் சொன்னதை நாங்கள் அவ்வாறே ஒப்புவிக்கின்றோம் அவ்வளவுதான். ஜனாதிபதி சொன்ன விடயங்களைச் செய்விக்க வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது. அந்த நடவடிக்கைகளில் அடுத்ததாக நாங்கள் ஈடுபடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

கொரோனா பாதிப்பு காரணமாக உருவான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீளும் | ஜனாதிபதி

Next Post

நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு கிடைக்காது | கிருபா பிள்ளை

Next Post
தென்னிலங்கை ஆட்சி மாற்றத்தால் தமிழருக்கு எந்த  விமோசனமும் இல்லை | கிருபா பிள்ளை வலியுறுத்தல்

நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு கிடைக்காது | கிருபா பிள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures