நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீராங்கனைகளின் பங்களிப்புடன் 141 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றியீட்டியது.
இதன் மூலம் இதுவரை தான் விளையாடிய 3 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றியீட்டி அணிகள் நிலையில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கின்றது.
ஒன்றை ஒன்று ஒரு தடவை லீக் சுற்றில் எதிர்த்தாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 8 நாடுகளுக்கு இடையிலான 12ஆவது மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் 11 போட்டிகள் இதுவரை நிறைவடைந்துள்ளன.
வெலிங்டன் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 269 ஓட்டங்களைக் குவித்தது.
30ஆவது ஓவரில் அவுஸ்திரேலியாவின் 4ஆவது விக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 113 ஓட்டங்களாக இருந்தது.
மத்திய வரிசையில் எலிஸ் பெரி, தஹ்லியா மெக்ரா ஆகியோர் குவித்த அரை சதங்கள் அவுஸ்திரேலியாவை பலம்வாய்ந்த நிலையை அடையச் செய்தது.
பெரி 68 ஓட்டங்களையும் மெக்ரா 57 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியா 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
அவர்களை விட ஆரம்ப வீராங்கனை ரஷெல் ஹேய்ன்ஸ் 30 ஓட்டங்ளையும் மத்திய வரிசையில் பெத் மூனி 30 ஓட்டங்களையும் ஏஷ்லி கார்ட்னர் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் லீ தஹுஹு 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
270 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சகல விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் அமி செட்டர்த்வெய்ட் மாத்திரமே திறமையை வெளிப்படுத்தி 44 ஓட்டங்களைப் பெற்றார். இவரைவிட லீ துஹுஹு (23), கேட்டி மார்ட்டின் (19), சுஸி பேட்ஸ் (16) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
நியூஸிலாந்தினால் பயன்படுத்தப்பட்ட 6 பந்துவீச்சாளர்களும் குறைந்தது ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். அவர்களில் டார்சி ப்றவுண் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷ்லி கார்ட்னர் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றி சிறந்த பந்துவீச்சு ஆற்றல்களை வெளிப்படுத்தி இருந்தனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]