நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய எக்ஸிம் வங்கி இந்த கடன் தொகையை வழங்கவுள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ள கடன் தொகையிலிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள முதலாவது எரிபொருள் தொகை செவ்வாய்கிழமை (15) கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்துடன் இந்திய எக்ஸிம் வங்கி 500 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்தினை கைசாத்திட்டது.
அந்த ஒப்பந்தத்திற்கமைய குறித்த 500 மில்லியன் டொலரில் 75 வீதத்தை இந்தியாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் , 25 வீதத்தை மூன்றாவது தரப்பிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த முடியும் என்றும் இந்திய எக்ஸிம் வங்கி நிபந்தனை விதித்துள்ளது.
அத்தோடு இந்த கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை 12 மாதங்களை விட நீடிக்க முடியாது எனவும் இந்திய எக்ஸிம் வங்கி தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள 500 மில்லியன் டொலர் கடன் மற்றும் 400 மில்லியன் டொலருக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ள நிலையிலேயே , எரிபொருளுக்கான கடன் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் , இது தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ விரைவில் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]