மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது பாரியளவில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.
கடந்த சில தினங்களாக மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனங்கள் மருந்தகங்களுக்கு மருந்து விநியோகத்தை நிறுத்தியுள்ளன.
டொலர் நெருக்கடியின் காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மருந்து இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான நெருக்கடி நிலைமையின் காரணமாக மருந்தகங்களினால் நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் , நரம்புடன் தொடர்புடைய நோய் நிலைமைகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு வழங்கப்படும் முக்கிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.
தற்போது 29 சதவீதத்தினால் மருந்துகளின் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் , அதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னரே மருந்து விநியோகம் முன்னெடுக்கப்படும் என்று இறக்குமதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதற்கமைய தற்போது நடைமுறையிலுள்ள மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை நாட்டின் தற்போதைய நிலைமையில் பொருத்தமானதல்ல எனவே நீக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
சீமெந்து, பால்மா உள்ளிட்டவற்றின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளமையைப் போன்றே மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலையும் நீக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கட்டுப்பாட்டு விலையை நீக்குவதன் மூலம் நாட்டில் எதிர்வரும் காலங்களில் ஏற்படக் கூடிய பாரிய மருந்து தட்டுப்பாட்டினை தவிர்த்துக் கொள்ள முடியும் என்று அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]