புனரமைக்கப்பட்டுள்ள தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது தேசிய மற்றும் கனிஷ்ட தகுதிகாண் மெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.70 மீற்றர் உயரத்தைத் தாவிய சச்சினி கௌஷல்யா பெரேரா தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
போட்டியின் 2 ஆம் நாளான வெள்ளிக்கிழமை 11 ஆம் திகதி நடைபெற்ற கோலூன்றிப் பாய்தல் போட்டியிலேயே இராணுவத்தைச் சேர்ந்த சச்சினி புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா மற்றும் கனிஷ்ட உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் ஆகியவற்றுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியின்போது 3.65 மீற்றர் உயரம் தாவி முன்னைய தேசிய சாதனையைப் புதுப்பித்த சச்சினி, இப்போது இரண்டாவது குதிகாண் போட்டியில் அந்த சாதனையை 5 சென்றி மிற்றரினால் முறியடித்துள்ளார்.
இதே போட்டியில் பங்குபற்றிய யாழ். மாவட்ட மெய்வல்லநர் சங்கத்தைச் சேர்ந்த என். தக்சிதா 3.40 மிற்றர் உயரம் தாவி 3ஆம் இடத்தைப் பெற்றார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அனித்தா ஜெகதீஸ்வரனுக்கு சொந்தமாகவிருந்த 3.55 மீற்றர் என்ற தேசிய சாதனையை 3.56 மீற்றர் உயரம் தாவி முறியடித்த சச்சினி, கடந்த வருட பிற்பகுதியில் 3.60 மீற்றர் உயரம் தாவி அதனைப் புதுப்பித்திருந்தார்.
கடந்த மாதம் 3.65 மீற்றர் தாவிய சச்சினி இப்போது 3.70 மீற்றர் உயரம் தாவி தனது சொந்த தேசிய சாதனையை நான்காவது தடவையாக புதுப்பித்துள்ளார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தற்போது இராணுவத்தில் கடமையாற்றி வருபவருமான ஏ. புவிதரன் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 5.10 மீற்றர் உயரம் தாவி முதலாம் இடத்தைப் பெற்றார்.
அப் போட்டியில் தேசிய சாதனை வீரர் எம். சந்தருவன் (5.00 மீற்றர்) இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]