இந்தோனேசியாவின் கரையோர வலையத்துக்கு அருகாமையில் இன்று (25) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது 6.2 ரிச்டெர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கத்தின் அதிர்வு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உணரப்பட்டுள்ளது.
எனினும் இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் மேற்கு பசாமன் ரீஜென்சியில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு அனர்த்த மேலாண்மை முகமை (BNPB) தலைவர் சுஹரியாண்டோ ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
பாடசாலைகள், வங்கி உள்ளிட்ட சில கட்டிடங்களும் இதனால் சேதமடைந்தன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தனது விரைவான மீட்பு குழுவை மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு பிராந்தியங்களான பசமன் மற்றும் மேற்கு பாசமான் ரீஜென்சிகளுக்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலநடுக்கம் சுமத்ரா தீவின் வடக்கே 12 கி.மீ ஆழத்தில், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள புக்கிட்டிங்கி நகரில் இருந்து 70 கிமீ தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை, ஆனால் அண்டை மாகாணங்களான ரியாவ் மற்றும் வடக்கு சுமத்ராவிலும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது
இந்தோனேசியா மேற்கு நேரப்படி காலை 8.39 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி காலை 9.39 மணிக்கு) நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னதாக 5.2 ரிச்டெர் அளவுள்ள முன்அதிர்வு ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து காலை 10.06 மணி வரை பல்வேறு அளவுகளில் 15 அதிர்வுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]