சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘வீரபாண்டியபுரம்’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமாகும் திரைப்படம் ‘வீரபாண்டியபுரம்’. இந்தப்படத்தில் நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் ,சரத் லோஹித்ஸ்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாஸ்கர் சக்தி வசனம் எழுத, சுசீந்திரன் இயக்கியுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நடிகர் ஜெய் இசை அமைத்திருக்கிறார். தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அவர்களின் உறவினரான திருமதி காயத்ரி தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் 18ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் ஓடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கு பற்றி முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமாகும் நடிகர் ஜெய் பேசுகையில், ” நான் 2002-ஆம் ஆண்டிலேயே லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஐந்தாம் கிரேட் இசையை பயின்றிருக்கிறேன். எம்முடைய தந்தையார் இசைக்கலைஞராக உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு இசையை கற்பித்தார். ஆனால் எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் நடிகனானேன்.
அதற்கு எம்முடைய அப்பா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதன்பிறகு கார் பந்தயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனைக் கற்றுக்கொள்ள விரும்பினேன். அதற்கும் எம்முடைய தந்தையார் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் எம்மை இசைக்கலைஞராக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. இதனை சற்று தாமதமாக உணர்ந்து கொண்டேன். அதே தருணத்தில் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் இசை தொடர்பான குறிப்புகளை எழுதி வைப்பேன். ‘ட்ரிபிள்ஸ்’ என்ற வலைதள தொடரை இயக்கிய இயக்குநர் சாருகேசி எம்மை சந்திக்க வந்தபோது, நான் ஒரு பாடலுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன். அந்தப் பாடலின் ஒலி கோர்வை வித்தியாசமாக இருந்ததாகக் கூறி, அந்தப் பாடலை கேட்க விரும்பினார் சாருகேசி. அந்த பாடலை அவருக்காக ஒலிக்க செய்தேன். பாடலைக் கேட்டவுடன் வியந்து பாராட்டிய அவர், ‘ட்ரிபிள்ஸ்’ தொடரில் ஒரு பாடலுக்கு இசை அமைப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். அந்த பாடலுக்கான பணியை நான் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் தயாரான படத்தின் படப்பிடிப்பில் பங்குபற்றி இருந்தபோது மேற்கொண்டேன். அந்தத் தருணத்தில் பாடலைக் கேட்ட சுசீந்திரன், ‘பாடல் நன்றாக இருக்கிறது. யார் இசையமைப்பாளர்?’ என கேட்டார். நான்தான் என்று சொன்னவுடன், எம்முடைய அடுத்த படத்திற்கு நீங்கள்தான் இசையமைப்பாளர் என உடனடியாக இசை அமைப்பாளருக்கான வாய்ப்பை வழங்கினார்.
அதன்பிறகு படப்பிடிப்பின் இடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கான மெட்டுகளை அமைத்தேன். மெட்டுக்களை கேட்ட இயக்குநர் சுசீந்திரன், அதற்கு சம்மதம் தெரிவித்து பாடலை எழுத வைரமுத்துவிடம் அனுப்பினார். அவர் பாடலின் மெட்டை கேட்டு, யார் இசை அமைத்தது? என கேட்டார். நடிகர் ஜெய் என்று இயக்குனர் சுசீந்திரன் சொன்னவுடன் எம்மை தொடர்பு கொண்டு மெட்டு நன்றாக இருக்கிறது என கவிப்பேரரசு பாராட்டினார். அதன் பிறகுதான் எனக்குள் ஒரு திரைப்படத்திற்கு இசை அமைக்கும் திறமை இருக்கிறது என்பதனை நம்பத் தொடங்கினேன்.
எம்முடைய இசை அமைப்பிற்கு உறவினரும், இசையமைப்பாளருமான போபோ சஷி, சம்பத் உள்ளிட்ட பலர் உதவி செய்திருக்கிறார்கள். இனி தொடர்ந்து இசை அமைப்பிலும் கவனம் செலுத்துவேன். நல்லதொரு தரமான பாடல்களை வழங்க இயலும் என உறுதி கூறுகிறேன். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக உயர்த்திய இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி. பாடல்களை கேட்டு ஆதரவளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
நடிகராக 25 படங்களை கடந்திருக்கும் ஜெய், முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமாகி இருப்பதால், ‘வீரபாண்டியபுரம்’ படத்திற்கு இளம் ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.