வடக்கு மீனவர்கள் அச்சமின்றி கடல் தொழிலுக்கு செல்ல முடியுமா? அல்லது அவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படுமா? இல்லையேல் இலங்கை – இந்திய மீனவர்களை முரண்பட வைக்கும் இராஜதந்திர சூழ்சிகள் ஏதேனும் முன்னெடுக்கப்படுகின்றதா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் கூடிய வேளையில், கடற்தொழில் அமைச்சின் அறிவிப்பொன்றை சபையில் முன்வைத்த கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்த விசேட அறிவிப்பொன்றை முன்வைத்தார்.
இதன் பின்னர் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி,
இந்திய மீனவர்களின் இழுவை வலைப்படகுகள் தொடர்பில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இதே சபையில் கேள்வி எழுப்பிய வேளையில், அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பிரச்சினைகளை முழுமையாக நிறுத்துவதாகவும், இனிமேல் இந்த பிரச்சினை இருக்காது எனவும் கூறினீர்கள்.
எனினும் 2022 ஆம் ஆண்டு மாசி மாதமாகியும் இன்றுவரை பிரச்சினைகள் தீரவில்லை. கடலுக்கு செல்லும் மீனவர்கள் சடலங்களாக திரும்பும் நிலைமையே காணப்படுகின்றது.
இன்று சபையில் நீங்கள் முன்வைத்த காரணிகளும் இதற்கு முன்னர் நான் கேட்க கேள்விக்கு கூறிய பதிலை ஒத்ததாகவே உள்ளது.
வடக்கு மீனவர்கள் அச்சமின்றி தொழிலுக்கு செல்ல முடியுமா? அல்லது அவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படுமா? அல்லது தமிழ் நாட்டு மீனவர்களையும், வடக்கு மீனவர்களையும் முரண்பாட்டிற்கு கொண்டுவரும் இராஜதந்திர சூழ்சிகள் ஏதேனும் இடம்பெறுகின்றதா? இதற்கு பதில் தெரிவியுங்கள் என்றார்.
இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் டக்லஸ் தேவானந்தா,
வழமை போன்று அரசியல் உள்நோக்குடன் தான் இவ்வாறான கேள்விகளை எழுப்புகின்றீர்கள். இதற்கு முன்னர் நீங்கள் முட்டுக்கொடுத்த ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் எதனையுமே செய்யவில்லை.
எழுத்தில் பல உறுதிமொழிகள் கொடுத்தும் எதனையும் செய்யவில்லை. எமது ஆட்சியில் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்போம், இப்போதும் தீர்வு கண்டுகொண்டுள்ளோம் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]