சுகாதார அமைச்சருடனான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்ததையடுத்து இன்றைய தினம் நான்காவது நாளாகவும் சுகாதார தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது.
தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் கைவிடப்பட மாட்டாது என்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியாகவுள்ளன. எவ்வாறிருப்பினும் இதன் காரணமாகவே பொது மக்களே பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
தாதியர் சேவை, முழு நேர மற்றும் இடைக்கால சுகாதார சேவை என்பவற்றை உள்ளடக்கிய 18 தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு , பதவி உயர்வு மற்றும் உயர்கல்விக்கான வாய்ப்புக்கள் உள்ளிட்ட 7 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் நேற்றுமுன்தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்ததோடு, தொழிற்சங்கங்களின் பிரதானிகள் சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.
எவ்வாறிருப்பினும் அமைச்சருடனான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றியே நிறைவடைந்தமையால் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தன.
சுகாதார அமைச்சிற்கு முன் அமைதியற்ற நிலை
சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு சங்கத்தினரால் நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சின் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு – விஹாரமகாதேவி பூங்காவிட்கருகில் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுகாதார அமைச்சு வரை பேரணியாக முன்னெடுக்கப்பட்டது.
அமைச்சின் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நுழைந்தமையால் அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. இதனால் பொலிஸார் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலை செயற்பாடுகள் முடங்கின
வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் வெளி நோயாளர் பிரிவு, மருந்து வழங்கல் பிரிவு உள்ளிட்ட சேவைகள் முற்றாக முடங்கின.
சேவையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் மருந்துகளைப் பரிந்துரைத்தாலும், அவற்றை வழங்கும் சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடவில்லை. இதனால் சிகிச்சை பெற வந்த மக்கள் மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியாமல் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
மேலும் காயமடைந்து சிகிச்சைக்காக வருகை தந்தோர், கண் சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னர் பரிசோதனைக்காக வருகை தந்தவர்கள், ஏனைய நோய்களுக்காக தொடர் சிகிச்சை பெறுபவர்கள் என அனைத்து நோயாளர்களும் வைத்தியசாலைகளுக்கு ஏமாற்றத்துடனேயே வீடுகளுக்குச் சென்றனர்.
அசௌகரியத்தில் நோயாளர்கள்
தமக்கான சிகிச்சைகளையும் , மருந்துகளையும் பெற்றுக் கொள்ள முடியாமல் அசௌகரியத்திற்கு உள்ளான மக்கள் கடும் விசனத்தை வெளியிட்டனர். ‘அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட வேண்டுமல்லவா? அவர்கள் தலையிடாமல் உறங்கிக் கொண்டிருப்பதால் நாமே பாதிக்கப்படுகின்றோம்.’, ‘பாராளுமன்றத்திலுள்ளவர்கள் சுகபோகமாகவே உள்ளனர்.
வறுமையிலுள்ள நாமே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றோம்.’ , ‘இவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தினை ஆரம்பிப்பதால் சில தினங்களில் ஏனையோரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்’ , ‘சுகாதார தரப்பினருக்கும், கல்வித்துறையிருக்கும் தங்க பவுன்களில் சம்பளத்தை வழங்கினாலும் போதாது என்றே கூறுவார்கள்’ என்று மக்கள் தமது விசனத்தை வெளியிட்டனர்.
சுகாதார அமைச்சு
சுகாதார தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வழங்கப்படக் கூடிய தீர்வுகள் துரிதமாக வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகளுக்கு துரித தீர்வினை வழங்க முடியும் என்றும், அவ்வாறான விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்க பிரதானிகளுடன் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]