அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 2 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம் பெற்றுள்ளது. துப்பாகி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட் தப்பி ஓடிய நிலையில் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் கான்ஸ்டபிள்களான நவீனன், துசார மற்றும் பிரபுதன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மெனராகலையைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் குமார என்பவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்கம விடுமுறை வழங்க வில்லை. இதனையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ரி 56 ரா துப்பாக்கியால் சரமாரியாக துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிஸார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிஸார் உயிரிழந்ததுடன் பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காயமடைந்த ஒரு பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட் அங்கிருந்து மோட்டர் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில் மொனராகலை அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து அந்தபகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாணா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சென்று நிலமையை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு பணித்துள்ளார்.
இது தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.
இதேவேளை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன் அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் துப்பாக்கி சூட்டு சத்தத்தையடுத்து பெரும் பயப்பீதியடுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]