சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு சர்ச்சைகளும், ஆதரவுகளும் எழுந்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால், இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ‘ஜெய் பீம்’ படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் சூர்யாவை எட்டி உதைப்பதற்கு ரூ.1 லட்சம் தருவதாகவும் பாமக பிரமுகர் கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்தும் சூர்யாவிற்கு ஆதரவாகவும் திரைத்துறையை சார்ந்தவர்கள் பலரும் குரல் கொடுத்தார்கள். இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், பா.ரஞ்சித், குமரன் உள்ளிட்ட பலரும், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட திரைத்துறை சம்மந்தப்பட்ட சங்கங்களும் அறிக்கை மற்றும் வீடியோ மூலம் ஆதரவை தெரிவித்தனர்.
சூர்யாவின் பதிவு
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘#Jaibhim மீதான இந்த அன்பு அலாதியானது. இதை நான் இதற்கு முன் இப்படி ஒரு அன்பை பார்த்ததில்லை! நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி’ என்று பதிவு செய்திருக்கிறார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]