ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக 30,000 மில்லியன் நிதி 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு மேலதிகமாக ஒதுக்கப்படும். ஆகவே இது சம்பள அதிகரிப்பு அல்ல. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி முழு வரவு செலவு திட்டத்திலும் 7.51 சதவீதமாக காணப்படுகிறது.
24 வருடகால பிரச்சினைக்கு நியாயமான தீர்வை காண அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கல்வி சிறந்த முதலீட்டை பயனுடையதாக்க ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினரிடம் வலியுறுத்தினார்.
ஆசிரியர் – அதிபர் சேவையில் சுமார் 24 வருட காலமாக நிலவும் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும், ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
மாணவர்களினது நலனையும், நாட்டின் எதிர்காலத்தினையும் கருத்திற் கொண்டு ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரன்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில் 2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு மேலதிகமாக 30,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக கல்வித்துறைக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ள நிதி முழு வரவு செலவு திட்டத்திலும் 7.51 வீதமாக காணப்படுகிறது என நிதியமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
தொழிற்சங்கத்தினரது கோரிக்கையை நிறைவேற்ற எடுத்த தீர்மானத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பின் போது நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹதபான்கொட ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காணும் யோசனையை அறிக்கையை நிதியமைச்சரிடம் சமர்ப்பித்தார்.
அச்சந்திப்பின் போது நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டதாவது,
சம்பள அதிகரிப்பில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே கட்டத்தில் வழங்குவது தொடர்பிலான பேச்சுவார்த்தை கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி இடம்பெற்றது. அதன்போது அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்,காமினி லொகுகே,பந்துல குணவர்தன,விமல் வீரவன்ச,உதய கம்மன்பில,ரமேஷ் பதிரன,லசந்த அழகியவன்ன, ஆகியோரை உள்ளக்கிய குழு நியமிக்கப்பட்டது.
24 வருடகாலமாக ஆசிரியர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டிற்கு சரியான தீர்வை முன்வைக்குமாறு யோசனை முன்வைத்தேன். சலக அரச சேவையாளர்களுக்கும் திருப்தியடையும் வகையில் வரவு – செலவு திட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிப்பது பொருத்தமாக அமையும் என கருதினோம்.
அமைச்சரவை உபகுழு அறிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. வரவு-செலவு திட்டத்தின் ஊடாக ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு மாநாயக்க தேரர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். விசேடமாக ஜனாதிபதியும் இப்பிரச்சினைக்கு விரையில் தீர்வு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போது பாடசாலையின் கற்பித்தல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே நெருக்கடியான சூழ்நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளோம்.
தற்போதைய தீர்மானம் ஆசிரியர்-அதிபர் சேவையின் சம்பள முரண்பாட்டை நீக்குவதே தவிர சம்பள அதிகரிப்பு அல்ல,24 வருட கால பிர்ச்சினைக்கு தீர்வு காண சாதாரண முறைமையை கையாள்வது அவசியம் என்பதை மாநாயக்க தேரர்களிடமும்,தொழிற்சங்க பிரதிநிதிகளிடமும் வலியுறுத்துகிறேன்.
வரவு செலவு திட்டத்திற்கு மேலதிகமாக ஆசிரியர்-அதிபர் சம்பள முரன்பாட்டை நீக்க 30000 மில்லியன் நிதியை ஒதுக்குவோம்.
முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் கல்வி துறைக்கு 6 சதவீத நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு பின்னர் 6 சதவீதம் மறக்கப்பட்டது.ஆனால் தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மொத்த செலவில் நூற்றுக்கு 7.51 சதவீதம் கல்வித்துறைக்காக ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நலனை கருத்திற் கொண்டு அத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி நாட்டின் மிக பெரிய முதலீடு என்பதை ஏற்றுக் கொள்கிறோம். கல்வி,சுகாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளுக்கு இணையாக உள்ளோம். தென்னாசியாவில் முன்னிலையில் உள்ளோம்.
முதலீட்டின் பயனை சிறந்த முறையில் பெற்றுத்தருமாறு தொழிற்சங்கத்தினரிடம் வலியுறுத்துகிறோம். கல்வித்துறையை மேம்படுத்த அரசாங்கத்திற்கும், கல்வி அமைச்சுக்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]