முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவ வசம் இருந்த 11 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 7 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள இதுவரை இராணுவப்பயன்பாட்டில் உள்ள 11 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய ஆவணத்தினை முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிலப்பிட்டிய உத்தியோகபூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனிடம் இன்றையதினம் (28) கையளித்துள்ளார்.
2009 க்கு முன்னர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை அமைந்திருந்த காணி தவிர்ந்த ஏனைய புதுக்குடியிருப்பு நகரத்துக்கு அண்மையாகவுள்ள மக்களின் காணிகளே இன்றையதினம் விடுவிக்கப்ட்டுள்ளன.
பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை இருந்த காணி தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமே காணப்படுகின்றது.
தமக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாரிகோரி 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் காணி உரிமையாளர்களால் குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன் பயனாக ஏழு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக காணியில் இராணுவம் தொடர்சியாக நிலைகொண்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த காணியில் அமைந்திருந்த 682 ஆவது பிரிகேட் தலைமையகத்தை முல்லைத்தீவு பரந்தன் வீதியில் கைவேலி மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அரச காணி 75 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதியை சுவீகரித்து பெரும் எடுப்பில் இராணுவ முகாமை அமைத்து அங்கு மாற்றியமைத்த நிலையிலேயே தற்போது இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
682ஆவது படைப்பிரிவு தலைமையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயக்காந் மற்றும் காணிப்பகுதி அதிகாரிகள், கிராமசேவையாளர் மற்றும் 68 ஆவது படை அதிகாரிகள் ஆகியேர் கலந்துகொண்டுள்ளார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]