இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகள் மோதும் குழு 1 க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி அபு தாபியில் இன்று பிற்பகல் (3.30 மணி) நடைபெறவுள்ளது.
இருபது 20 கிரிக்கெட் யுகத்தில் இந்த இரண்டு அணிகளினதும் வீரர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இருபது 20 கிரிக்கெட் லீக் போட்டிகளில் ஒன்றாகவும் எதிராகவும் விளையாடிவந்துள்ளனர்.
ஆனால், இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தேசிய அணிகள் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.
நடப்பு இருபது 20 உலகக் கிண்ணத்தில் இந்த இரண்டு அணிகளும் தத்தமது இரண்டாவது போட்டியில் இன்று விளையாடவுள்ளன.
இங்கிலாந்து அதன் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 55 ஓட்டங்களுக்கு சுருட்டி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியதுடன், இன்று 2 ஆவது வெற்றிக்கு குறிவைத்து களம் இறங்கவுள்ளது.
மறுபுறத்தில் முதல் சுற்றில் ஸகொட்லாந்திடம் முற்றிலும் எதிர்பாராத விதமாகவும் சுப்பர் 12 சுற்றில் இலங்கையிடம் கடும் போராட்டத்துக்கு மத்தியிலும் தோல்வி அடைந்த பங்களாதேஷ் அத் தோல்விகளை நிவர்த்தி செய்வதற்கு இன்று முயற்சிக்க உள்ளது.
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தரவரிசையில் முதலாம் இடத்திலுள்ள இங்கிலாந்து, எதிரணியின் சவாலை குறைத்து மதிப்பிடாமல் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடவுள்ளது.
இங்கிலாந்து தனது அணியில் மாற்றம் எதுவும் செய்யாமல் விளையாடுவதை விரும்பக்கூடும்.
ஆனால், வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் மார்க் வூட் தற்போது பூரண உடற்தகுதியைக் கொண்டுள்ளதால் அணியில் இடம்பெறுவதற்கு தயாராக உள்ளார்.
எனவே துடுப்பாட்ட வீரர் ஒருவருக்குப் பதிலாக அவரை அணியில் சேர்ப்பது குறித்து இங்கிலாந்து ஆலோசிக்கலாம் என கருதப்படுகின்றது.
மறுபுறத்தில், வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலையில் உள்ள பங்களாதேஷ், மிகச் சிறந்த வியூகங்களை அமைத்து கடும் முயற்சியுடன் விளையாடவுள்ளது.
பங்களாதேஷ் அணியின் பயிற்றுநர் ஒட்டிஸ் கிப்சன், சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணியுடனும் இணைந்து செயற்பட்டிருந்தார்.
இதன் காரணமாக இங்கிலாந்தின் நேர்மறையான அணுகுமுறைகளை, பலம், பலவீனங்களை அவர் நன்கு அறிவார். இந்த அறிவுகளைப் பயன்படுத்தி அவர் பங்களாதேஷ் அணியினரை பொறுமையுடன் திட்டங்களை ஆடுகளத்தில் செயற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றால், குழு 1 இல் முதலாம் இடத்துக்கு முன்னேறும். அத்துடன் அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொள்ளும். பங்களாதேஷ் வெற்றிபெற்றால் இக் குழுவில் 5 அணிகள் தலா 2 புள்ளிகளுடன் எஞ்சிய போட்டிகளை எதிர்கொள்ளும்.
இந்த இரண்டு அணிகளிலும் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களும் பந்துவீச்சாளர்களும் இடம்பெறுவதால் இப் போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் சகலதுறை வீரர்களான ஷக்கிப் அல் ஹசன், மொயின் அலி ஆகியோரின் பங்களிப்புகள் இப் போட்டியில் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும் எனவும் கருதப்படுகின்றது.
அணிகள்
இங்கிலாந்து: ஜேசன் ரோய், ஜொஸ் பட்லர், ஜொனி பெயார்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஒய்ன் மோர்கன் (தலைவர்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், மார்க் வூட், டய்மல் மில்ஸ்.
பங்களாதேஷ்: மொஹம்மத் நய்ம், லிட்டன் தாஸ், ஷக்கிப் அல் ஹசன், முஷ்பிக்குர் ரஹிம், மஹ்முதுல்லாஹ் (தலைவர்), அபிப் ஹொசெய்ன், நூருள் ஹசன், மஹெதி ஹசன், மொஹம்மத் சய்புதின், தஸ்கின் அஹ்மத், முஸ்தாபிஸுர் ரஹ்மான். – (என்.வீ.ஏ.)
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]