இருபதுக்கு – 20 உலகக்கிண்ண சுப்பர் 12 சுற்றின் பரபரப்பான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பொறுப்புடன் ஆடிய பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஜோடி 151 என்ற வெற்றி இலக்கை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்து பாகிஸ்தானுக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று இரவு டுபாயில் இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. விராட் கோலி, ரிஷப் பண்ட் இருவரும் நிதானமாக ஆடினர். ரிஷப் பண்ட் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
நிதானத்துடனும் பொறுப்புடனும் ஆடிய அணித்தலைவர் விராட் கோலி 57 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்தியா அணி 20 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதையடுத்து, 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்களாக பாபர் அசாம், மொகமது ரிஸ்வான் இறங்கினர்.
ஆரம்பத்தில் இருந்தே இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விரட்டியடித்தனர். இருவரும் அரை சதமடித்து இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்வதற்கு இந்திய அணி பல வியூகங்களையும் வகுத்த போதிலும் அவை கைகூடவில்லை.
இறுதியில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தானின் ஷாகீன் அப்ரிடி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]