புலம்பெயர் புலி அமைப்புகள் என்பது வேறு, புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு, எனினும் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலோ புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதிலோ எந்த தவறும் இல்லை.
நாட்டை ஐக்கியம் மற்றும் அபிவிருத்தியில் சகலரும் ஒன்றிணைந்து பயணிக்க முடியும் என ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சபையில் கூறுகின்றனர். நாட்டில் சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வேலைத்திட்டங்களை உள்ளக பொறிமுறை மூலமாக தீர்க்க புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கியமாக பயணிக்கவே நாம் முயட்சிக்கின்றோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாய்மூல அறிக்கையில் உள்ளடக்க விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர்கள் இதனை கூறினார்,
இது குறித்து ஆளுந்தரப்பு உறுப்பினர் சாந்த பண்டார விவாதத்தில் உரையாற்றுகையில்,
நாட்டின் உள்ளக பிரச்சினைகளை தீர்க்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்த கருத்து தொடர்பில் பல விமர்சனக்கருத்துக்கள் எழுந்துள்ளன. புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு, புலம்பெயர் தமிழ் புலி அமைப்புகள் வேறு என்பதை முதலில் சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எவ்வாறு உருவாகியது.
1983 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்தன நாட்டை ஆட்சி செய்த காலத்தில் ஏற்பட்ட கருப்பு ஜூலை கலவரத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய அநியாயங்கள் காரணமாக, வரலாற்றில் அழிக்கவே முடியாத அந்த சம்பவத்தினால் இந்த நாட்டில் வாழ்ந்த கற்ற தமிழ் சமூகத்தினர், பொருளாதார ரீதியில் பலமாக இருந்தவர்கள், வியாபாரிகள் சகலருக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.
தமிழ் மக்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறினர். ஆரம்பத்தில் இந்த நாட்டில் தமிழ் வைத்தியர்கள் அதிகளவில் இருந்தனர், பாகுபாடு இல்லாது அவர்களின் சேவை எம் அனைவருக்கும் கிடைத்தது. அவ்வாறு இருக்கையில் முக்கியமான ஒரு தரப்பை இந்த நாட்டை விட்டு விரட்டியடித்தனர். அவர்களே சர்வதேச தளத்தில் புலம்பெயர் அமைப்புகளை உருவாக்கினர்.
இன்று ஒரு பக்கம் விடுதலைப்புலிகள் அமைப்புகள் உள்ளன, மறுபக்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் உள்ளனர். தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த தவறும் இல்லை. புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதிலும் எந்த தவறும் இல்லை. பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட காலம் கடந்துவிட்டது.
தற்போது வரையிலும் 12 ஆயிரத்திற்கு அதிகமான முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்து சமூக மயப்படுத்தியுள்ளோம். இது குறித்து ஏன் எவரும் பேசுவதில்லை. சிறையில் உள்ள பல தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இது குறித்து எதிர்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கலாம் தவறில்லை,.
ஆனால் சர்வதேசத்திடம் செல்லும் வேளையில் நாம் இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் பயணிக்க வேண்டும் . இலங்கை இராச்சியத்தில் எதிர்க்கட்சிகளும் உள்ளன. ஆகவே இதனை விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும. சர்வதேச மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளில் ஒன்றாக செயற்பட வேண்டும். சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை இனவாத பிரச்சினையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இதன்போது உரையாற்றுகையில்,
அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்த வாக்குவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளன. முன்னைய ஆட்சியில் இதே கொள்கை முன்னெடுக்கப்பட்ட வேளையில் ஆதரித்தவர்கள் இன்று அதனை எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து ஆரோக்கியமான விடயங்களையும் முன்வைத்துள்ளார் . நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை அவர் ஆதரித்துள்ளார். உள்ளக பொறிமுறையில் அவருக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது.
நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து இலங்கையில் உள்ள தூதரகங்கள், ஜெனிவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் கலந்துரையாடி வருகின்றோம். பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து தெளிவான நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளோம். உள்ளக பொறிமுறை மூலமாக இதனை நாம் முன்னெடுக்க தயாராக உள்ளோம். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை 15 நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆதரித்துள்ளன.
சர்வதேச தரப்பில் உயரிய மட்ட பேச்சுவார்த்தைகளை இப்போதும் ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வேலைத்திட்டங்களை உள்ளக பொறிமுறை மூலமாக தீர்க்க புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கியமாக பயணிக்கவே நாம் முயட்சிக்கின்றோம். சவால்களை வெற்றிகொள்ள சகல விதத்திலும் முயட்சிக்கின்றோம் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]