ஜோர்தான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற ஆசிய கடல்சூழ் (பசுபிக்) பிராந்தியத்துக்கான குழு 3 டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியில் பங்குபற்றிய இலங்கை, 2022க்கான டேவிஸ் கிண்ணப் போட்டியில் குழு 4க்கு தரமிறக்கப்பட்டுள்ளது.
குழு 3க்கான குழு சியில் இடம்பெற்ற இலங்கை தனது இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் குழு 4க்கு தரமிறக்கப்பட்டுள்ளது.
சிரியாவுடனான முதலாவது போட்டியில் 0 – 3 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை தோல்வி அடைந்தது.
முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் கடும் சவால் விடுத்து விளையாடிய யசித் டி சில்வாவை 6 – 4, 2 – 6, 7 (7) – 6 (4) என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் சிரியா வீரர் யாக்கூப் மக்ஸூம் வெற்றிகொண்டார்.
2ஆவது ஒற்றையர் ஆட்டத்தில் இலங்கையின் தெஹான் விஜேமான்னவை 2 நேர் செட்களில் (6 – 0, 6 – 4) கரீம் அல் அலாப் இலகுவாக வெற்றிகொண்டார்.
கடைசியாக நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் கரீர் அல் அலாப், அமிர் நவோவ் ஆகிய ஜோடியினரிடம் 2 நேர் செட்களில் (4 – 6, 6 – 7) சத்துரிய நிலவீர, தெஹான் விஜேமான்ன ஜோடியினர் தோல்வி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஜோர்தானை எதிர்த்தாடிய இலங்கை 1 – 2 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் தோல்வி அடைந்தது.
முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் சய்ப் அதாஸை 2 நேர் செட்களில் (6 – 4, 7 – 6) யசித்த டி சில்வா வெற்றிகொண்டதன் மூலம் இலங்கைக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.
ஆனால், இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் மூசா அல்கோடொப் என்பவருக்கு கடும் சவால் விடுத்த சத்துரிய நிலவீர 1 – 2 என்ற செட்கள் (2 – 6, 6 – 3, 5 – 7) அப்படையில் சத்துரிய நிலவீர தோல்வி அடைந்தார்.
இரட்டையர் ஆட்டத்திலும் இலங்கையின் யசித்த டி சில்வா, தெஹான் விஜேமான்ன ஜோடியினர் கடும் சவாலாக விளங்கியபோதிலும் ஜோர்தானின் ஹம்ஸே அல் அஸ்வாத், மூலா அல்கொடோப் ஜோடியினர் 2 நேர் செட்களில் (7 – 6, 6 – 4) வெற்றிபெற்றனர்.
குழு சியில் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்ற சிரியா அடுத்த வருடம் குழு 2க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது. 2ஆம் இடத்தைப் பெற்ற ஜோர்தான் தொடர்ந்தும் குழு 3இல் இடம்பெறவுள்ளது.
இலங்கை அணியில் இடம்பெற்ற அனைவரும் இளம் வீரர்கள் என்பதுடன் போதிய அனுபவம் இல்லாதவர்களாவர். எனினும் அவர்களது ஆற்றல்களும் முயற்சிகளும் எதிர்காலத்தில் பெரு முன்னேற்றம் அடைவார்கள் என்பதை எடுத்துக்காட்டின.
இப் போட்டியில் பங்குபற்றியவர்களில் 21 வயதான யசித் டி சில்வா மாத்திரமே சிறிது அனுபவசாலியாவார். சத்துரிய நிலவீரவுக்கு 17 வயது என்பதுடன் தெஹான் விஜெமான்ன 18 வயதுடையவராவார்.
இலங்கை அணியில் இடம்பெற்ற நான்காவது வீரரான விபுத விஜேபண்டாரவின் 21ஆகும். இவர் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.
அணியின் விளையாடாத தலைவராகவும் பயிற்றுநராகவும் ரெனூக் விஜேமான்ன செயற்பட்டார்.