ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான செயல்முறை முடிவடைந்து விட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
அதன்படி “இஸ்லாமிய அரசாங்கத்தின் அறிவிப்புக்கான ஆயத்தங்கள் முடிந்துவிட்டன, எனினும் தொழில்நுட்ப சிக்கல்கள் எஞ்சியுள்ளதாக” முஜாஹித் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனால் புதிய அரசாங்கம் விரைவில் அறிவிக்கப்படும். இருப்பினும் தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் அப்துல் கனி பரதர் புதிய அரசாங்கத்தை வழிநடத்துவாரா என்பதை அந்த செய்தியில் தலிபான் செய்தித் தொடர்பாளர் குறிப்பிடவில்லை.
ஒரு மாதத்திற்கு முன்பு, தலிபான்கள் அரசாங்கப் படைகளுக்கு எதிரான தாக்குதலை முடுக்கிவிட்டனர். இறுதியாக ஆகஸ்ட் 15 அன்று காபூலுக்குள் நுழைந்ததுடன், அடுத்த நாள், போர் முடிவடைந்ததாக அறிவித்தனர்,
ஆகஸ்ட் 31 இரவு அமெரிக்க இராணுவம் திட்டமிட்டபடி காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறியது. இதனால் ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 20 வருட அமெரிக்க இராணுவத்தின் இருப்பு முடிவுக்கு வந்தது.
செப்டம்பர் 6 திங்கள் அன்று, தலிபான்கள் எதிரிகளின் கோட்டையாக இருந்த பஞ்சாஷிரையும் கைப்பற்றி 34 ஆப்கானிஸ்தான் மாகாணங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததாக அறிவித்தனர்,
எனினும் அஹ்மத் மசூத் தலைமையிலான உள்ளூர் எதிர்ப்புப் படைகள் பஞ்ச்ஷீரின் வீழ்ச்சி பற்றிய செய்தியை மறுத்தமையும் குறிப்பிடத்தக்கது.