நடாலை வென்ற ஜோகோவிச்சுக்கு சிட்சிபாஸ் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என நினைத்தபோதும் சிட்சிபாஸ் மிகவும் சிறப்பாக விளையாடிய நிலையில், கடும் போராட்டத்திற்குப்பின் சிட்சிபாஸை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச்.
நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செம்மண் தரையில் நடைபெறுவது பிரெஞ்ச் ஓபன்.
புல் தரையில் விளையாடுவது போல், செம்மண் தரையில் விளையாடுவது எளிதானது அல்ல.
களிமண் தரையில் சிங்கமான ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் ஜோகோவிச்.
மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் 8ஆம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இருவரும் சாம்பியன் பட்டத்திற்கான பலப்பரீட்சை நடத்தினர்.
முதல் செட்டில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை கைப்பற்றினர். இறுதியில் சிட்சிபாஸ் 7(8)- 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார்.
அதே உத்வேகத்துடன் விளையாடி ஜோகோவிச் சுதாரிப்பதற்குள் 2ஆவது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார்.
3 ஆவது செட்டை கைப்பறினால் சாம்பியன் பட்டத்தை வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் சிட்சிபாஸ் களம் இறங்கினார்.
ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், 3-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.
நீண்ட நேரம் போட்டி நடைபெற்ற நிலையில், ஜோகோவிச் ஆட்டத்திற்கு முன் சிட்சிபாஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. 4 ஆவது செட்டையும் ஜோகோவிச் 6-2 என எளிதில் கைப்பற்றினார்.
வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டிலும் ஜோகோவிச் 5-4 என முன்னிலை பெற்ற நிலையில் 6-4 என கடைசி செட்டையும் கைப்பற்றி 6(6)-7(8), 2-6, 6-3, 6-2, 6-4 என போராடி வெற்றி பெற்றார்.
சுமார் 4.40 மணி நேரம் நடைபெற்ற ஆட்டத்தில் 3-2 என கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி 2-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார் ஜோகோவிச். மேலும், இது அவரின் 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.