உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சமயத்தில் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றமைக்கான மருத்துவ அறிக்கைகளை கையளிக்கும்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவை பிறப்பித்தது.
கடந்த 23ஆம் திகதி அவர் ஆணைக்குழுவில் முன்னிலையானபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு 46 நிமிடங்களின் முன்னதாக அரச புலனாய்வு சேவை இயக்குனர் நிலந்த ஜெயவர்த்தன, தொலைபேசிவழியாக முன்னாள் ஜனாதிபதியை தொடர்பு கொண்டது தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக ஆணைக்குழுவில் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவிடப்பட்டது.
எனினும், தொலைபேசி உரையாடல் தரவை மைத்திரி மறுத்தார்.
தாக்குதலின் பின்னரே நிலந்த தன்னை தொடர்பு கொண்டதாகவும், இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் இரண்டரை மணித்தியால நேர வித்தியாசமுள்ளதாகவும் தெரிவித்தார்.
நான் மருத்துவமனையில் இருந்தேன். தேவைப்பட்டால் நான் மருத்துவ அறிக்கைகளை தர முடியும். சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து ஹோட்டலுக்கு வந்தேன். சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து நான் தொலைபேசியில் ஆலோசனை வழங்கினேன் ”என்று அவர் மேலும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடம், ஜனாதிபதி சட்டத்தரணி ஷாமில் பெரேரா கேள்வியெழுப்பியபோது- உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை முதல் தாக்குதல் காலை 8.45 மணிக்கு நடந்தது. காலை 8.58 மணிக்கு இரண்டாவது தாக்குதலுக்கு 23 நிமிடங்கள் முன்னதாக, எஸ்ஐஎஸ் முன்னாள் இயக்குனர் ஜெயவர்தன ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டாரா? மேலும் காலை 9.13 மணிக்கு ஜெயவர்தனவுக்கு 184 வினாடி அழைப்பு விடுத்தீர்களா என்றார்.
சம்பவம் அவருக்கு அறிவிக்கப்பட்டபோது, அவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும்
அழைப்புகளுக்கு பதிலளித்ததுடன், தேவையான ஆலோசனைகளையும் வழங்கியதாக மைத்திரி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ஷாமில் பெரேரா மீண்டும் கேள்வியெழுப்பினார்- பேஜட் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கும், நிலந்த ஜெயவர்த்தனவிற்குமிடையில் ஜனவரி 1 முதல் 2019 ஏப்ரல் 31 வரை 221 தொலைபேசி அழைப்புக்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் உங்களுக்கும் ஜெயவர்தனவுக்கும் இடையே ஏப்ரல் மாதத்தில் 82 தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுள்ளன என்றார்.
எனினும் மைத்திரி, தொலைபேசி பகுப்பாய்வில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும், பல அழைப்புகள் வந்ததாக எனக்கு நினைவில் இல்லை. நிலந்த எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைப்பு விடுத்தாரா என்பது எனக்குத் தெரியாது.
ஆனால் பல அழைப்புகளுக்கு பதிலளிக்க எனக்கு நேரம் இல்லை ”என்று சிறிசேன பதிலளித்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜெயவர்தன தொலைபேசியில் தனக்கு அறிவிக்கவில்லை என்றும் சிறிசேன தெரிவித்தார்.
மேலும் சாட்சியமளிக்கும் முன்னாள் ஜனாதிபதி, பயங்கரவாத தாக்குதல்கள் பல துறைகளில் கூட்டு பொறுப்புகளை மீறியதால் ஏற்பட்டது என்று கூறினார்.
2017 ஆம் ஆண்டில், சஹ்ரன் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. காவல்துறையினர் அவரைக் கைது செய்திருக்க வேண்டும், அவரை கைது செய்ய நான் பல சந்தர்ப்பங்களில் உத்தரவு பிறப்பித்திருந்தேன் என்றார்.
மேலதிக சாட்சியங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒக்டோபர் 29 அன்று ஆணைக்குழு முன் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

