20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரையில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
20ஆவது திருத்தச் சட்டம் இன்னும் முழுமை பெறாத நிலையிலேயே உள்ளது. 20ஆவது திருத்தம் தொடர்பில் பொறுத்திருந்து இறுதி நேரத்தில் சரியான தீர்மானத்தினை எடுக்க வேண்டும்.
சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேச வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது.
நான்கரை வருடங்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஆதரவினை வழங்கிய போதிலும் அதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எந்தவிதமான தீர்வினையும் வழங்காமல் நல்லாட்சி ஏமாற்றியுள்ளது.
இருந்த மாகாணசபையினையும் இல்லாமல் செய்தது நல்லாட்சி அரசாங்கம் தான். சிறுபான்மை கட்சிகளும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

