நபர் ஒருவரிடமிருந்து 540,000 பெறுமதியான 30, 000 கிலோ வல்லாரைக் கீரைகளை கொள்வனவு செய்து விட்டு பணத்தை கொடுக்காமல் கடந்த 22 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்த நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கம்பளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபர் 1998 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வல்லாரைக் கீரைச் சாற்றினால் பானங்கள் தயாரிக்கப் போவதாகக் கூறி நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து மேற்படி வல்லாரைக் கீரைகளை பெற்றுக் கொண்டு பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி உள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் பாதிக்கப்பட்டவரினால் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு நாவலப்பிட்டி நீதிமன்றத்தினாலும் 22 வருடங்களுக்கு முன்னர் சந்தேக நபருக்கு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது
இந்நிலையிலேயே கம்பளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவல் ஒன்றின் அடிப்படையில் இரத்மலானை பகுதியில் வைத்து சந்தேக நபரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
குறித்த நபர் கைது செய்யப்படும்போது அவருக்கு 78 வயது என்பது குறிப்பிடத் தக்கது.

