இம்முறை பெரும்போக நெற் செய்கையின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 67932 ஹெக்டேயர் வயல் நிலங்களுக்கு மானிய உரம் கிடைக்க சிபார்சு செய்யப்பட்டுள்ளதாக தேசிய உரச் செயலக மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுன் தெரிவித்தார்.
இவ்வாண்டின் இறுதியில் ஆரம்பித்து அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறுவடைய செய்ய எதிர்பார்க்கும் நெற் செய்கைக்கான மானிய உரத்தினைப் பெற்றுக் கொடுக்கத் தேவையான முன்மெழிவு மாவட்ட செயலகத்தினூடாக விவசாய அமைச்சின் தேசிய உரச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மறுவயல் பயிர்கள் செய்கை பண்ணப்படும் 4250 ஹெக்டேயர் நிலத்திற்கும், மரக்கறிப் பயிர்கள், பழவகைகள் செய்கை பண்ணப்படும் 2177 ஹெக்டேயர் நிலத்திற்குமான உரத்தினைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இம்முறை அரசாங்கத்தினால் சுகாதார உணவு மேம்பாட்டிற்காகவும், நஞ்சற்ற உணவுகளை பெற்றுக் கொள்வதற்கும், மண்வளத்தினைப் பாதுகாத்து சுற்றுச் சூழல் பாதுகாப்பினை உறுதி செய்யவும் இலவசமாக வழங்கப்படும் மானிய உரம் இரசாயனப் பசளையுடன் சேர்த்து சேதனப் பசளையும் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் அதற்கான ஊக்குவிப்புக்களும் விழிப்பூட்டல் நடவடிக்கைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

