இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக இலங்கை வடபகுதி கடற்பரப்பில் பாதுகாப்பை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்பியவேளை இராஜாங்க அமைச்சர் காஞ்சனவிஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனசார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வடபகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள இராஜாங்க அமைச்சர் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரிப்பது குறித்து அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக இந்திய மீனவர்களை கைதுசெய்தால் எங்கு தடுத்துவைப்பது என்ற குழப்பம் நிலவுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கப்பல் தீ பிடித்த விவகாரத்தில் கடற்படை கவனம் செலுத்துவதால் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து கவனம் செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கடற்படையுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளேன் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

