நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட யாப்பு திட்டத்தில் நாட்டை சமஸ்டியாக பிரிப்பதற்கான விடயங்கள் உண்டு அதனால் அதனை எற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் அமைச்சரவையில் ஆராயப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் 3 வாரத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்படும். நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடனே இது நிறைவேற்றப்படும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்பொழுது மேற்கொண்டுள்ளது.
இந்த திருத்தத்திற்கு எதிராக எவராவது நீதி மன்றம் சென்றால் மேலும் 3 வார காலம் செல்லும். புதிய அரசியல் யாப்பு விரிவாக ஆராயப்படாமல் அரசாங்கம் ஒருபோதும் நிறைவேற்றாது.
சகல தரப்பினரும் கருத்துக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். புதிய அரசியல் யாப்பு வகுப்பது ஒருவிடயம். இதற்கு பிரசித்திபெற்ற யாப்பு சட்டத்தரணி ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவே இதனை ஆராயும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

