கோஸ்டி மோதல் காரணமாக இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் மாணவனான 15 வயதுச் சிறுவன் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை 22 இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது 15) எள்ற மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சிறு வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த விடயம் கோஸ்டி மோதலாக மாறி பின்னர் பழி தீர்க்கும் வகையில் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படுகொலை செய்யப்பட்ட மாணவன் விளையாட்டுக்களில் மிகவும் ஆர்வத்தோடு பங்குபற்றுபவர் என்றும் சிறந்த பணிவான குணாம்சங்கள் கொண்டவர் என்றும் விளையாட்டுப் பயிற்சி உத்தியோகத்தர் லோகிதராசா ஜயஜனனி தெரிவித்தார்.
மேலும் செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து இந்த மாணவன் பங்குபற்றிய கூடைப்பந்தாட்ட அணி முதற் தடவையாக கல்குடா வலய மட்ட அரை இறுதிப் போட்டி வரை சென்றது எனவும் படுகொலை செய்யப்பட்ட மாணவன் கடெற் அணியிலும் பங்குபற்றி சிறந்த ஒழுக்கங்களைப் பேணி வந்தவர் என்றும் ஜயஜனனி மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவம்பவத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்கின்றனர்.