இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் குறித்த இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய – இலங்கை உடன்படிக்கையின் விளைவாக 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதுடன் அதன் ஒரு பகுதியாக 9 மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சில அதிகாரங்கள் பகிரப்பட்ட போதிலும் அதில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.
அதேவேளை இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படைகள் தொடர்பாக இந்தியா கூடிய அர்ப்பணிப்புடன் இருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தமது பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 13வது திருத்தச் சட்டம் உட்பட இலங்கையில் முன்னெடுக்கப்படும். அனைத்து விடயங்கள் சம்பந்தமாக புதுடெல்லி உன்னிப்பாக அவதானித்து வருகிறது எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.