சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு, கிழக்கில் நினைவு கூறப்படுகின்றது. இந்த நிலையில் தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு வருடமும் போராட்டங்களையும், கண்டன பேரணியையும் மேற்கொண்டு வருகின்றதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேசம் இது வரை தமக்கு ஒரு தீர்வையும் பெற்றுத் தரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை வடக்கு – கிழக்கில் 8 மாவட்டங்களை உள்ளடக்கி மாபெரும் கண்டன பேரணி ஒன்றை மேற்கொள்ள
தீர்மானித்துள்ளோம்.
யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் குறித்த கண்டன பேரணி ஒரே நேரத்தில் இடம்பெற உள்ளது.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களையும் உள்ளடக்கி யாழ். மாவட்டத்தில் கண்டன பேரணி மேற்கொள்ளப்படும்.
யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இருந்து யாழ். மாவட்டச் செயலகம் வரை கண்டன ஊர்வலம் இடம்பெறும்.
அது போன்று திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி மட்டக்களப்பில் அன்றைய தினம் கண்டன பேரணி இடம் பெறும்.
மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் வரை கண்டன பேரணி இடம் பெறும்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அன்று எதிர்வரும் 30ஆம் திகதி குறித்த கண்டன பேரணியை மேற்கொள்ள உள்ளோம்.
ஒவ்வொரு வருடமும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு, கிழக்கில் நினைவு கூறப்படுகின்றது. எங்களுக்கு என தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் போராட்டங்களையும், கண்டன பேரணியையும் மேற்கொண்டு வருகின்றோம்.
ஆனால் இது வரை இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேசம் இது வரை எங்களுக்கு ஒரு தீர்வையும் தரவில்லை. தீர்வு கிடைக்கும் என்று நம்பி நாங்கள் ஒவ்வொரு வருடமும் இதனை செய்து வருகின்றோம்.
இந்த வருடம் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைய அரசாங்கமே அவ்வளவு மக்களையும் காணாமல் ஆக்கச் செய்தது. எனவே காணாமல் ஆக்கிய அரசாங்கத்திடமே நாங்கள் தீர்வை கேட்க வேண்டும்.
மன்னார் மாவட்டத்தை பொருத்த வகையில் 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை 85 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்டம் முப்படையினரின் பாதுகாப்பில் இருந்த காலப்பகுதியில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளடங்குகின்றனர். முப்படையினரே எங்களுக்கு பாதுகாப்பு என்று இருந்த கால கட்டத்தில் இவர்கள் படையினராலேயே பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
எனவே இவர்களே எமக்கு பதில் கூற வேண்டும்.இவர்களின் பதிலை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே இருக்கின்றார்கள் என்று காட்ட வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் இத்தனை பிள்ளைகளை தொலைத்து விட்டு தாய்மார்கள் கண்ணீரோடு வீதிகளில் நிற்கின்றனர். அவர்களுக்கும் வயது போகின்றது. காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடுகின்ற பல அம்மாக்கள், அப்பாக்கள் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கதைத்துக் கொண்டு இருக்கின்ற நாங்கள் அடுத்த வருடம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வரை உயிரோடு இருப்போமா? என்று தெரியவில்லை. எனவே எங்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்க வேண்டும்.
எனவே ஒவ்வொரு அமைப்புக்களும், குறிப்பாக அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள், பொது மக்கள், வர்த்தக சங்கம், தனியார் வாகன உரிமையாளர் சங்கம் ஆகியோர் எங்களுக்கு பலமாக செயற்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்களுக்கு மாத்திரம் பிள்ளைகள் இல்லை.
உங்களுக்கும் உறவுகள். எனவே நீங்களும் எங்களுடன் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. மேலும் அம்பாறை மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் பெயர் பலகை அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
எதற்காக செய்தார்கள் என்று தெரியவில்லை.அவர்களை அச்சுறுத்தும் வகையில் மொட்டைக் கடிதமும் வைக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவங்களை பார்க்கின்ற போது எமது உயிர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளமை தெரியவருகின்றது. எனவே சர்வதேசம் எங்களையும் திரும்பி பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.