கம்பஹா மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள், டெங்கு தொற்று நோய் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், இதுவரை 800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இதில் ஒருவர் மரணித்துள்ளதாகவும், கம்பஹா மாவட்ட தொற்று நோய்ப்பிரிவின் விசேட வைத்தியர் எஸ். ஆர். ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு, அத்தனகல்ல, தொம்பே, களனி ஆகிய பிரதேசங்களிலேயே ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த 2016, 2017 ஆம் வருடங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 2017 ஆம் வருடத்தில் மாத்திரம் 31 ஆயிரத்து 637 பேருக்கு டெங்கு நோய் தொற்றியிருந்தது. இதில் ஆண் பெண் என பல்வேறு வயதுடைய 80 பேர் இறந்திருப்பதாகவும் வைத்தியர் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், டெங்கு தொற்று நோய் மேலும் பரவி, பேராபத்தை விளைவிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் தமது வீடு மற்றும் சுற்றுச் சூழல் என்பவற்றில் அக்கறை கொண்டு, எந்நேரமும் சுத்தமாக வைத்திருப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் வைத்தியர் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.