‘நெஞ்சம் மறப்பதில்லை’யில் பேய் கதாபாத்திரத்தில் ரெஜினா
செல்வராகவன் இயக்கி வரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரெஜினா.
‘கான்’ படம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்க ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை தொடங்கினார் இயக்குநர் செல்வராகவன். ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்து வந்தார்கள்.
ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பங்களாவில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் முதல் பேய் படம் இது.
மேலும், இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருப்பதாகவும், தமிழ் திரையுலகில் இதுவரை வெளியான பேய் படங்களை ஒப்பிடும்போது, இப்படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து செல்வராகவனுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன். இப்படத்தை கெளதம் மேனன் மற்றும் மதன் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இணையத்தில் வெளியானது. அதற்கு இது நிஜமானது அல்ல என்று படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.