ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கோட்டையெனக் கருதப்படுகின்ற கொழும்பு மாநகர சபையை அந்தக் கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது. உள்ளூராட்சிசபைத் தேர்தலில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 353 வாக்குகளைப் பெற்று 60 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதன்படி முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட ரோஸி சேனாநாயக்க கொழும்பில் முதலாவது பெண் மேயராக விரைவில் பதவியேற்கவுள்ளார்.
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன 60 ஆயிரத்து 87 வாக்குகளுடன் 23 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 31 ஆயிரத்து 421 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களுடன் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது.
அதேவேளை, ஏணிச் சின்னத்தில் ஒருமித்த முற்போக்குக் கூட்டணியில் தனித்துக் களமிறங்கிய அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஜே.வி.பி. 6 ஆசனங்களையும், ஐக்கிய சமாதான முன்னணி 2 ஆசனங்களையும், சுயேச்சைக்குழு 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியப்படை ஆகிய கட்சிகள் தலா ஓர் ஆசனம் வீதமும் கைப்பற்றியுள்ளன.