முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், பொதுமக்களின் 189 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறிலங்கா இராணுவம் ஏமாற்றியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரால் உறுதியளிக்கப்பட்டது போல, நேற்று காணிகள் விடுவிக்கப்படவில்லை என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கேப்பாப்புலவு பகுதியில் இராணுவமுகாம் அமைந்திருந்த 189 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்படுவதாக இருந்தது.
இந்த நிகழ்வுக்காக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் வருகை தந்திருந்தார்.
எனினும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் காணிகள் இதற்குள் அடங்கவில்லை என மக்கள் தெரிவித்த காரணத்தால், இந்த நிகழ்வை அவர்கள் புறக்கணித்தனர்.
இதன்பின்னர், இந்தப் பிரச்சனை தொடர்பாக, அமைச்சருடன் மக்கள் கலந்துரையாடியதன் காரணத்தால், காணிகளைப் பெறமுடியாமல் போனது.
காணிகள் கையளிப்பதற்கு ஏற்ற வகையில் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அவற்றைக் கையளிக்க முடியும். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் எவருடைய காணியும் அதனுள் அடங்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிப்பதாக கூறிய 189 ஏக்கர் காணிகளும், காடுகளே என்றும், மக்கள் வசிக்காத பகுதிகள் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மக்கள் வசிக்காத காடுகளே விடுவிக்கப்படுகிறது என்று தனக்குத் தெரியாது என்றும், தாம் இங்கு வந்த பின்னரே அதை அறிந்து கொண்டதாகவும், அங்கிருந்த மக்களிடம் அமைச்சர் சுவாமிநாதன் கூறினார்.
இதுதொடர்பாக சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
அதேவேளை, பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள தமது முகாம்களை இடம்மாற்றுவதற்கு என்று 5 மில்லியன் ரூபாவை மீள்குடியேற்ற அமைச்சிடம் வாங்கிக் கொண்டு, சிறிலங்கா இராணுவ இராணுவம் வெறும் காடுகளையே விடுவிக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.