செயற்கை மழையை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஆராயும் வகையில், இலங்கையில் திணைக்களமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிசக்தி, மின்சக்தி அமைச்சினால் இத்திணைக்களம் உருவாக்கப்படவுள்ளதாக சக்தி, மின்சக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பெரேராவை மேற்கொள்காட்டி இத்தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, செயற்கை மழையை பொழிவிப்பது தொடர்பான பயிற்சிகளை பெறுவதற்காக இலங்கை விமானப்படை, வளிமண்டலவியல் திணைக்களம், இலங்கை மின்சார சபை, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் அடுத்த மாதம் தாய்லாந்துக்குச் செல்லவுள்ளனர்.
நீர்மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை பேணுவதற்காகவும், வறட்சியின் போது விவசாயத்துறைக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவுமே இந்த செயற்கை மழைக்கான திணைக்களம் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.