ஒருநாள் போட்டி வரலாற்றில் 400 ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைத்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இலங்கைக்கு எதிரான 4வது போட்டியில் தோனி, மணிஷ் பாண்டே சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்த போது இம்மைல்கல்லை எட்டியது. இன்று இந்திய வீரர்கள் ரன் மழை பொழிந்தால், 401வது ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைக்கலாம். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா (366 முறை) உள்ளது.
இந்தியா சார்பில், முதல் விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 94 முறை ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைக்கப்பட்டது. இதில் சச்சின்-கங்குலி ஜோடி அதிகபட்சமாக 258 ரன்கள் (எதிர்-கென்யா, 2001) குவித்தது.
123* ரன்கள்
கடந்த 1975ல் லீட்சில் நடந்த கிழக்கு ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் கவாஸ்கர், பரூக் இன்ஜீனியர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது. இது, ஒருநாள் அரங்கில் இந்தியா சார்பில் பதிவான முதல் ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’.
26 முறை
ஒருநாள் அரங்கில் அதிக முறை 100 அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்த ஜோடிகள் பட்டியலில் இந்தியாவின் சச்சின், கங்குலி ஜோடி முன்னிலை வகிக்கிறது. இந்த ஜோடி 176 இன்னிங்சில், 26 முறை ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைத்தது.
331 ரன்கள்
கடந்த 1999ல் ஐதராபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் சச்சின், டிராவிட் ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 331 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.
அடுத்த இடத்தில் இந்தியாவின் கங்குலி–டிராவிட் (318 ரன்கள், 2வது விக்கெட், எதிர்: இங்கிலாந்து, 1999, இடம்: டான்டன்) ஜோடி உள்ளது.
372 ரன்கள்
கடந்த 2015ல் கான்பெராவில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 372 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற வரலாறு படைத்தது.
அடுத்த இடத்தில் இந்தியாவின் சச்சின்–டிராவிட் (331 ரன், 2வது விக்கெட், எதிர்–நியூசிலாந்து, இடம்: ஐதராபாத், 1999) ஜோடி உள்ளது.
10 முறை
இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லி, ரோகித் சர்மா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், 10 முறை, ‘டபுள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் கோஹ்லி.
3வது முறை
இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்தது. இது, இந்த ஜோடியின் 3வது ‘டபுள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’. இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், அதிகமுறை ‘டபுள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைத்த ஜோடிகள் பட்டியலில் முதலிடத்தை இந்தியாவின் சச்சின்–கங்குலி, காம்பிர்–கோஹ்லி, இலங்கையின் மகிளா ஜெயவர்தனா – உபுல் தரங்கா ஜோடியுடன் பகிர்ந்து கொண்டது.