கூகுள் பலூன் திட்டம் 4-ஜீ வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதே தவிர , ”வை -பை” வலயத்தை அமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல என்று தொலைத் தொடர்புகள் , டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்புகள் அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, ஜே.வி.பி எம்.பி பிமல் ரத்நாயக்கவினால் இலங்கையில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்த ”கூகுள் பலூன்” கருத்திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தெரிவித்ததாவது,
”கூகுள் பலூன்” வேலைத்திட்டம் தொடர்பாக தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சில நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது கூகுள் நிறுவனத்துடன் தொடர்புடையதேயாகும் . கூகுள் பலுனை இங்கு செயற்படுத்தி பார்ப்பதற்கு குறித்த நிறுவனங்கள் இணைந்து செயலணி குழுவை அமைத்திருந்தது.
ஆனால் இதற்காக இலங்கை எந்த வகையிலும் செலவு செய்திருக்கவில்லை. இலங்கையில் வான் பரப்பில் அந்த பலூன் வந்தபோது அது உடைந்து விழவில்லை. அது சிவில் விமான சேவை அதிகாரிகளினால் திட்டமிட்டவகையில் கீழ் இறக்கப்பட்டுள்ளது. எனினும் தவறான வகையில் கருத்துக்களை பரப்பி இந்த விவாகரத்தை நகைப்புக்குரிய ஒன்றாக மாற்றிவிட்டனர்.
எவ்வாறாயினும் கூகுள் பலூன் தொடர்பாக தவறான கருத்துக்களே மக்கள் மத்தியில் சென்றது. அந்த பலூனின் ஊடாக வைபை கொடுக்க முடியாது. அதன் மூலம் 4 ஜீ தொழிநுட்பத்தை வழங்குவதே அந்த பலூனின் அடிப்படை நோக்கமாகும்.
வை பை வலயம் அதனுடன் தொடர்புடைய வேலைத்திட்டம் அல்ல . அது வேறு வேலைத்திட்டம். கூகுள் நிறுவனத்தினால் எமக்கு இலவசமாக வழங்கிய திட்டமே இது. இதில் அனுமதிப் பத்திரம் தொடர்பாக பிரச்சினை இருக்கின்றது.
எவ்வாறாயினும் எமக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அதனை நிறைவேற்ற முடியும். இந்த விவகரம் குறித்து கலந்துரையாட மீண்டும் நான் ஜெனிவா செல்கின்றேன். இப்போது ஒரு சில நெருக்கடிகள் எமக்கு எழுந்துள்ளது. இவை இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் கலம்ந்துரையாடி தீர்க்க வேண்டிய பிரச்சினைகளாகும்.
இந்தத் திட்டத்தை அரச தலைவர் முதலில் ஏற்றுகொள்ளவில்லை. அதற்கு இந்த பலூன் தொடர்பில் சரியான தெளிவில் இருக்காதமையே காரணமாகும். எனினும் இப்போது அவர் விளங்கிக் கொண்டுள்ளார். எமக்கு அங்கீகாரமும் கொடுத்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.

