உதயன் பல்சுவைக் கலைவிழா 2ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. “பைரவி” இசைக்குழுவின் மெல்லிசையும் நடனங்களும் பல உரைகளும் இடம்பெற்ற போதும் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்ற பட்டிமன்றமே உச்சக் கட்ட நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. பட்டிமன்றத்திற்கு தலைவராகவும் நடுவராகவும் கலந்து கொள்வதற்காக பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் ராஜா தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்தார். இந்தப் பட்டிமன்றத்தின் பேச்சாளர்களாக கோதை அமுதன், கணபதி இரவீந்திரன், கவிஞர் புஹாரி மற்றும் Dr. போல் ஜோசப் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். பேசியவர்களில் மண்டபத்தில் இருந்தவர்களைக் கட்டிப் போட்டவர் கோதை அமுதன் தான். தமிழகத்தில் இருந்திருந்தால் மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் கோதை அமுதன் சக்கை போடு போட்டிருப்பார் என்று ராஜாவே மேடையில் தன்னை மறந்து பாராட்டியது முக்கியமானது. கோதை அமுதனுக்குச் சளைக்காமல் கணபதி இரவீந்திரனும் விவாதித்து பார்வையாளர்களின் கை தட்டுதல்களைப் பெற்றுக் கொண்டார். இரவு 11 மணிக்கு பட்டி மன்றம் முடிவடையும் வரைக்கும் எவரும் எழுந்து செல்லாது மண்டபத்தினை நிறைத்திருந்தது இந்தப் பட்டி மன்றத்தின் வெற்றியைப் பறை சாற்றி விட்டது. பங்கு பற்றிய அனைவரையும் மதிப்பளித்து கௌரவித்த உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் உதவிகள் புரிந்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த உதயன் பல்சுவைக் கலைவிழா இன்று 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.